இந்திய நாடாளுமன்ற சபாநாயகரின் அழைப்பை ஏற்று சிறிலங்கா சபாநாயகர் சமல் ராஜபக்ச தலைமையிலான நாடாளுமன்றக் குழுவொன்று ஐந்து நாள் பயணமாக நேற்று புதுடெல்லி சென்றது.
இந்தக் குழுவினர் இன்று இந்திய நாடாளுமன்றத்துக்கு சென்றிருந்தனர்.
சபாநாயகருக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த சிறப்பு ஆசனங்களில் அமர்ந்த சிறிலங்கா குழுவினரை வரவேற்று சபாநாயகர் மீரா குமார் அறிக்கை ஒன்றை வாசித்த போது அதிமுக உறுப்பினர்கள் செம்மலை, முனுசாமி, தம்பித்துரை ஆகியோர் வெட்கம்... வெட்கம் என்று உரக்கக் குரல் எழுப்பி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் ஒன்பது பேரும் சேர்ந்து கொண்டு சிறிலங்கா அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியதுடன் மேசைகளில் தட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இவர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பி.லிங்கமும் இணைந்து கொண்டு சிறிலங்கா அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்.