இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மாநில அரசுடன் எந்தவிதமான தொடர்புகளையும் சிறிலங்கா வைத்துக் கொள்ளாது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வைகோ போன்றவர்களின் ஆவேசமான பேச்சுக்களாலேயே இவ்வாறான விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் கெஹலிய ரம்புக்வெல குற்றம்சாட்டியுள்ளார்.
இனிமேலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை புரசைவாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் பகல் 1.30 மணியளவில், சிங்கள சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த இடத்துக்கு சென்ற 20 பேர் கொண்ட குழுவொன்று அவர்களை தாக்கியதாகவும் சிறிலங்கா அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
சிங்கள வாசகம் பொறிக்கப்பட்ட மேற்சட்டையை கழற்ற வைத்து தீயிட்டு கொளுத்திய அவர்கள், உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து உடனடியாக அங்கு சென்ற சிறிலங்கா தூதரக அதிகாரிகள் 84 சுற்றுலாப் பயணிகளையும் எழும்பூரிலுள்ள மகாபோதி நிலையத்துக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக தங்க வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, சிறிலங்காவைச் சேர்ந்த 84 சுற்றுலாப் பயணிகளும் காவல்துறை பாதுகாப்புடன் நேற்று மாலை சென்னை விமான நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.