பெய்ஜிங் அனைத்துலக விமான நிலையத்தில் சிறிலங்கா அதிபரையும் அவருடன் சென்ற குழுவினரையும் சீனாவின் நிறைவேற்று உதவி வெளிவிவகார அமைச்சர் சங் சியுன் வரவேற்று அழைத்துச் சென்றார்.
சீன அதிபரின் அழைப்பின் பேரில் அரசுமுறைப் பயணமாக சீனா சென்றுள்ள மகிந்த ராஜபக்ச அங்கு சீனஅதிபர் ஹுஜின்டாவோ, பிரதமர் வென் ஜியாபோ ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
சிறிலங்கா அதிபருடன் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியொரும் சீனா சென்றுள்ளனர்.
முன்னதாக மகிந்த ராஜபக்சவின் இந்தப் பயணம் அரசுமுறையற்றது என்று சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவுப் பணிப்பாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது இது அரசுமுறைப் பயணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிறிலங்கா அதிபரின் இந்தப் பயணம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அனைத்துலக ஊடகம் ஒன்று போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான மேற்குலக அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில், செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சீனாவின் ஆதரவைப் பெறவே அவர் அங்கு சென்றுள்ளதாக கூறியுள்ளது.