மாலைதீவு கடற்பரப்பின் ஊடாக சிறிலங்காவிற்குச் சொந்தமான கப்பல்கள் போக்குவரத்துச் செய்வதற்கான உடன்படிக்கை ஒன்றை எந்தவொரு முன்னறிவித்தலுமின்றி சிறிலங்காவுடன் மேற்கொண்டதைக் கண்டித்தும் அந்த உடன்படிக்கையை உடனடியாக நீக்கம் செய்யுமாறும் மாலைதீவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அரசாங்கத்திடம் பெரும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
Dhivehi Rayyithunge Party -DRP என்னும் மாலைதீவு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அலி சலீமின் தலைமையிலேயே நேற்றைய தினம் மாலைதீவு நாடாளுமன்றில் கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாலைதீவு அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடல்சார் ஒப்பந்தம் தொடர்பான செய்தி சிறிலங்கா ஊடகம் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த உடன்படிக்கை தொடர்பாக மாலைதீவு ஊடகங்களுக்கு மீன்பிடித்துறை அமைச்சரான கலாநிதி இப்ராகிம் டிடி மற்றும் மாலைதீவு அதிபரின் ஊடகச் செயலாளரான மொகமட் சுகேயர் ஆகியோரால் வழங்கப்பட்ட செய்திகள் ஒன்றிற்கொன்று முரண்பட்ட நிலையிலிருந்தன. இதனாலேயே மாலைதீவு எதிர்கட்சியினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
"சிறிலங்காவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த உடன்படிக்கையின் பின்னால் என்ன உள்ளது என்பது தொடர்பாக நாடாளுமன்றம் பார்க்கவேண்டியுள்ளது" என தனது ஆரம்ப கட்டக் கருத்துரையின் போது சலீம் தெரிவித்துள்ளார்.
"அரேபியக் கடலூடாகப் பயணிக்கும் சிறிலங்காக் கப்பல்கள் சுறாக்களையோ அல்லது மீன்களையோ காவிச்சென்றாலும் கூட நீங்கள் அது பற்றி ஏதாவது அறிந்திருப்பீர்களா? நேற்றைய தினம் தான் இந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் ஒருபோதும் அதுபற்றி அறிந்திருக்க முடியாது" எனவும் சலீம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த உடன்படிக்கையின் பின்னால் 'பல விடயங்கள் ஒளிந்திருப்பதாக' நாடாளுமன்ற விவாதத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலைதீவுக் கடற்பரப்பின் ஊடக சிறிலங்காக் கப்பல்கள் பயணிப்பதற்கான உடன்படிக்கை எந்தக் கடற்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துமாறும், பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக சிறிலங்காத் தூதரகத்திற்கு 48 மணிநேர முன்னறிவித்தலை வழங்குமாறும் நாடாளுமன்ற விவாதத்தின் போது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
"இந்த உடன்படிக்கை தொடர்பாக தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள சட்ட ரீதியற்ற மீன்பிடி என்பது பொய்த் தகவலாகும். இது தொடர்பான சரியான தகவல்களை நாம் கண்டறிந்துகொள்வதே மிகச் சிறந்ததாகும்" என மாலைதீவைத் தற்போது ஆட்சிசெய்கின்ற மாலைதீவு ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மொகமட் சசீட் தெரிவித்துள்ளார்.
"தற்போது செய்துகொள்ளப்பட்டுள்ள கடல் ஒப்பந்தம் தொடர்ந்தும் அமுல்ப்படுத்தப்படுமாயின், அதற்கு முன்னர் மாலைதீவிற்குச் சொந்தமான மீன்பிடி வலயங்கள் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் வருமானங்கள் போன்றவற்றைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு மாலைதீவு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்" என DRP யின் நாடாளுமன்ற உறுப்பினரான மதிவெறி குசெயின் மொகமட், நாடாளுமன்ற விவாதத்தின் போது தெரிவித்துள்ளார்.
இவ்வாறான உடன்படிக்கையின் மூலம் நடுநிலையான, ஒருநிலைப்பட்ட மாலைதீவின் வெளிநாட்டுக் கொள்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதுடன் பல நூறு ஆண்டுகளாக சுதந்திரமாக உள்ள மாலைதீவு நாடு பெரும் ஆபத்தை சந்திக்கலாம் என DRP யின் நாடாளுமன்ற உறுப்பினரான அலி அறிப் தெரிவித்துள்ளார்.
"மாலைதீவு ஜனநாயகக் கட்சியானது ஆட்சியமைத்துக் கொண்ட 2008 தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் அக்கட்சியால் இந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு செயற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் அங்கீகாரமளித்திருந்தது. இதற்கு நன்றிக்கடனாக தற்போது சிறிலங்காவுடன் கடலொப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது என நான் நம்புகின்றேன்" என Jumhooree கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான இப்ராகிம் முத்தலிப் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்களைக் கண்காணிப்பதற்கான போதியளவு ஆற்றல் மாலைதீவு மீனவர்களிடம் இல்லை என ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களால் கூறப்பட்ட கருத்தை மாலைதீவு ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மொகமட் சிபாஸ் ஏற்றுக்கொண்டுள்ளார்.
சட்டரீதியற்ற மீன்பிடித் தொழிலானது கண்காணிக்கப்படாதுவிடில் மாலைதீவின் உள்நாட்டு மீன்பிடித்துறையானது பெரும் ஆபத்தைச் சந்திக்கும் என மாலைதீவு ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அண்மைக் காலங்களில் சிறிலங்காவிற்குச் சொந்தமான மீன்பிடிக் கப்பல்கள் மாலைதீவுக் கடற்பரப்பில் சட்ட ரீதியற்ற மீன்பிடியில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினரான அஹ்மட் தஸ்மீன் அலி குறிப்பிட்டுள்ளார்.
"எமது நாட்டுக் கடல் எல்லைகளுக்குள் சட்டரீதியற்ற விதத்தில் மீன்பிடியில் ஈடுபடுகின்ற வெளிநாட்டுக் கப்பல்களைக் கண்டறிந்து அவற்றைத் தடுத்து நிறுத்தக் கூடிய வலு எமது நாட்டு அரசாங்கத்திற்கோ அல்லது எமது நாட்டிற்கோ இல்லை என்பது எமது நாட்டு மீனவர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும. அத்துடன் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள கடல் உடன்படிக்கையானது எமது நாட்டின் பொருளாதார வலயத்தினைக் கண்காணிப்பதில் மேலும் சிக்கலை ஏற்படுத்திவிடும்" என அஹ்மட் தஸ்மின் அலி மேலும் எச்சரித்துள்ளார்.
மீன்வளத்தைக் குறைக்கக் கூடிய சுறா வகை கடல்வாழ் உயிரினங்களைப் பிடிக்கின்ற செயற்பாட்டில் சிறிலங்கா மீன்பிடிக் கப்பல்கள் ஈடுபட்டுவருவதாகவும் தஸ்மீன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான கடல் சார் உடன்பாடொன்றை மேற்கொள்வதற்கு முன்னர் 'பரந்த விட்டுக்கொடுப்புக்கள்' இடம்பெற்றிருக்கவேண்டும் எனவும் எதிர்க்கட்சித்தலைவரான தஸ்மீன் தெரிவித்துள்ளார்.
"இதற்கு முன்னிருந்த அரசாங்கம் 1982 ல் ஐ.நாவின் கடற்சட்டத்தை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டிருந்தது. இதன் பிரகாரம், எந்தவொரு வெளிநாட்டுக் கப்பல்களும் அனைத்தலகக் கடற்பரப்பின் ஊடாகப் பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்" என மாலைதீவு ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அஹ்மட் கம்சா தெரிவித்தார்.
சாதாரண போக்குவரத்துக்களை மேற்கொள்வதற்கான அனுமதி மட்டுமே இச்சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான கப்பல்கள்கள் பயணிப்பதற்கான அனுமதி மிகக் கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சாசனத்தின் பிரகாரம் தான் சிறிலங்காவுடனான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்பது உத்தியோகபூர்வமாக கண்டறியப்பட்ட பின்னர் இது தொடர்பான விவாதம் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட வேண்டும் என கம்சா ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தி வழிமூலம்: Minivan News
0 comments:
Post a Comment