26 ஆண்டுகளாகத் தொடர்ந்த சிறிலங்காவின் உள்நாட்டுப் போரானது மே 2009 இல் நிறைவுக்கு வந்தபோது சிறிலங்காப் படைகளை வழிநடத்திய மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது யுத்தக் குற்றங்களை முன்வைத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட மக்களிற்கான அமைப்பு மற்றும் TRIAL ஆகிய சுவிஸைத் தளமாகக் கொண்டியங்கும் இரு மனித குழுக்களும் வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பாக தாம் இரகசிய முறைப்பாடொன்றை சுவிஸ் நாட்டின் பிரதம வழக்கறிஞரிடம் மேற்கொண்டுள்ளதாகவும் இக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது 80,000 தொடக்கம் 100,000 வரையானவர்கள் கொல்லப்பட்டனர் என ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிக் கட்டப் போரில் சில பகுதிகளுக்குப் பொறுப்பாகவிருந்து யுத்தத்தை வழி நடத்திய டயஸ் செப்ரெம்பர் 2009ல் ஜேர்மன், சுவிற்சர்லாந்து மற்றும் வத்திக்கான் ஆகிய நாடுகளுக்கான சிறிலங்காவின் தூதராக நியமிக்கப்பட்டார்.
யுத்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதென்பது மிகவும் இலகுவானதெனவும், ஆனால் ஒரு போர்க்குற்றவாளி என்பதைத் தான் மறுப்பதாகவும் பேர்லினிலுள்ள தனது தூதரக பணியகத்தில் இருந்து டயஸ் தெரிவித்தார்.
"எந்தவொன்றிற்காகவும் யாரையும் யாரும் குற்றம் சாட்டமுடியும். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மையானதாக இல்லை. நாங்கள் யுத்தத்தில் ஈடுபட்ட போது பொதுமக்களுக்கு எந்தவொரு இழப்புக்களும் ஏற்படக்கூடாது என்ற கொள்கையைப் பின்பற்றியிருந்தோம். உண்மையில் நாங்கள் மக்களை அழிக்க வேண்டும் என நினைத்திருந்தால், எங்களால் 300,000 வரையான மக்களை எவ்வாறு காப்பாற்றியிருக்க முடியும் அல்லது விடுவித்திருக்க முடியும்" என டயஸ் Associated Press இடம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் யுத்தம் முடிவிற்கு வந்த போது அதிலிருந்து உயிர் தப்பிய 300,000 வரையான மக்கள் சிறிலங்காவின் வடபகுதியிலுள்ள காடுகளில் அமைக்கப்பட்ட முகாங்களில் தங்கவைக்கப்பட்டதுடன், அதில் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் களைந்தெடுக்கப்பட்டனர்.
டயஸின் கீழ் செயற்பட்ட சிறிலங்கா இராணுவ வீரர்கள் வைத்தியாசாலைகள் மற்றும் மக்கள் வாழிடங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்களுக்குப் பொறுப்பாளிகளாவர் என ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர் குழுவின் சாட்சியங்களிலிருந்தும் ஏனைய அனைத்துலக நிறுவனத் தகவல்களிலிருந்தும் அறியக் கூடியதாகவுள்ளதாக சுவிஸ் குழுக்கள் முறையீடு செய்துள்ளனர்.
"யுத்தக் குற்றங்களுக்கு எதிராக சுவிற்சர்லாந்தானது தனது எதிர்ப்பைக் காட்டுவதற்கான மிகப் பொருத்தமான ஒரு சந்தர்ப்பமாக உள்ளது" என இக்குழுக்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுக்களால் வழங்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பாகத் தாம் ஆராய்ந்து வருவதாக சுவிற்சர்லாந்தின் வழக்கறிஞர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த விடயமானது சிறிலங்கா அதிகாரிகளுடன் தொடர்புபட்டுள்ளதால் இதனைத் தாம் தமது கவனத்தில் எடுத்துள்ளதாக சுவிஸ் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் தூதர் பதவிகள் வழங்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் களமுனைத் தளபதிகளில் டயசும் ஒருவராவார். "அனைத்துலக நிறுவனங்களாலும் மனித உரிமைகள் அமைப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்டுள்ள தீவிர குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு நாம் தற்போது ஜெகத் டயசிற்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளோம். டயஸ் ஒரு தூதராக இருக்கின்ற போதிலும், அவர் சுவிற்சர்லாந்தில் வைத்துக் கைதுசெய்யப்படலாம் என நாம் கருதுகிறோம்" எனவும் TRIAL சார்பாக வாதிடும் வழக்கறிஞரான Benedict De Moerloose தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் இறுதிக் கட்ட உள்நாட்டுப் போரில் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றக்காட்சிகளை உள்ளடக்கிய ஆவணப்படம் ஒன்றை பிரிட்டனின் சனல் 04 தொலைக்காட்சிச் சேவை வெளியிட்டிருந்தது. இதில் காண்பிக்கப்பட்டவாறு சரணடைந்தவர்கள் மீது சிறிலங்கா இராணுவ வீரர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்கள் மற்றும் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வருமாறு சிறிலங்கா அரசாங்கத்தை ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர் குழு கடந்த மேயில் அழைத்திருந்தது.
இது தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றவரான டயஸ், 1983-2009 வரை முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டு யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாத புலி ஆதரவுக் குழுக்களால் உருவாக்கப்பட்ட போலியான ஆவணப்படத்தையே சனல் 04 வெளியிட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தார்.
"இது போலியானது. இதில் எந்தவொரு உண்மைத் தன்மையும் இல்லை" எனவும் டயஸ் மேலும் தெரிவித்துள்ளார். உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது எந்தவொரு பொதுமக்களும் கொல்லப்படவில்லை என யுத்தம் நிறைவுக்கு வந்ததையடுத்து சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்திக் கூறியது. ஆனால் இதற்கு மாறாக யுத்தம் இடம்பெற்ற இறுதி ஐந்து மாதங்களில் 7000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.