நடிகர் விஜயின் மக்கள் இயக்க ஆலோசனை கூட்டம் கடலூரில் நேற்று நடந்தது. ஆலோசனை கூட்டத்தில் நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்து கொண்டு மக்கள் இயக்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “நடிகர் விஜய் இன்னும் 5 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 2 படங்கள் வீதம் பத்து, இருபது படங்களில் நடிக்க வேண்டியுள்ளதால் இப்போதைக்கு அவர் நேரடியாக அரசியலில் இறங்க மாட்டார்.
‘விஜய்தான் நம் சக்தி’
கடந்த தேர்தலில் அ.தி.மு.க. அணியை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று நான் தான் சொன்னேன். அப்போது நான் சொன்னதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு முழு மூச்சாக உழைத்தீர்கள் அல்லவா! அதேபோல் நான் உங்களை வழிநடத்துவேன். விஜய் நமக்கு பின்னாடி இருப்பார்.
அவர் தான் நம் தலைவர். அவர் தான் நம் சக்தி. அந்த சக்தியை நாம் கேடயமாக வைத்துக்கொண்டு களம் இறங்கி மக்கள் பணி செய்ய வேண்டும்.
மக்கள் இயக்க நிர்வாகிகள் ஒவ்வொருவரும் அவரவர் வார்டுகளில் உள்ள மொத்த ஓட்டுகளில் பாதிப் பேரை உறுப்பினர்களாக சேருங்கள். உங்கள் வார்டுகளில் பாதி பேரை உறுப்பினர்களாகச் சேர்த்தவர்கள் அவர்களை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்து என்னை சந்தியுங்கள். வருகிற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உங்களுக்கு நான் சீட் வாங்கி தருகிறேன்.
விஜயை முதலில் நடிகராக போட்டு படம் எடுக்கும் போது, இவனை போட்டு படம் எடுக்கிறாரே சந்திரசேகரனுக்கு என்ன கிறுக்கா? என்று சொன்னார்கள். ஆனால் இன்று விஜய் இளைய தளபதி. அவரை போல் உழையுங்கள். விஜயின் மக்கள் இயக்கத்தை வைத்து கவுன்சிலராக ஆனேன், எம்.எல்.ஏ. ஆக ஆனேன் என்று நீங்கள் சொல்ல வேண்டும், இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு செயல்படுங்கள்,” என்றார்.