Saturday, August 6, 2011

சுவாசிக்கும் இடமெல்லாம் சிங்கள வாசம் வீசுகிறது - இந்திய ஊடகவியலாளர்

தமிழ்ப் பிரதேசங்களின் ஊடாகப் பயணித்த போது சிங்கள ஆதிக்கத்தின் மனேநிலையைப் பிரதிபலிக்கின்ற பல்வேறு நடவடிக்கைகளை எம்மால் அவதானிக்க முடிந்தது. அதாவது நாம் சுவாசிக்கும் இடமெல்லாம் சிங்கள வாசம் வீசியது.

இவ்வாறு சென்னையை தளமாகக் கொண்ட The Weekend Leader இணையத்தளத்தில் அதன் செய்தியாளர் கொழும்பில் இருந்து எழுதியுள்ள பத்தியில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்காவின் வடபகுதியில் உள்ள தமிழர் பகுதிகளின் ஊடாகப் பயணிப்பவர்கள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சில மாற்றங்களைப் பார்த்து அதிர்ச்சியடைவார்கள்.

தமிழர்களின் பாரம்பரிய தேசமாகவும் தமிழர்களின் கலாசாரங்களை வெளிப்படுத்தி நின்றதுமான இந்தப் பிரதேசங்கள் தற்போது சிங்களமயமாக்கப்பட்டு வருகின்றன. அதாவது தமிழர் வாழ் பிரதேசங்களில் புத்தர்சிலைகள், விகாரைகள் என்பன புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.


A recently constructed Buddhist stupa at Kanagarayankulam


A huge Buddha statue at Kilinochchi, the erstwhile capital of Tamil rebels


A Sinhala-only signboard at an important junction in Puthukudyiruppu


A Sri Lankan defence outpost in Puthukudyiruppu with name board in Sinhalese and English

அத்துடன் தமிழர்களின் வீடுகள் அழிக்கப்பட்டு தற்போது இந்தப் பிரதேசங்களில் உள்ள மக்கள் சிறுகுடிசைகளை அமைத்து வாழ்கின்றனர். தமிழர்கள் வாழ்கின்ற வவுனியாவிலிருந்து அவர்களின் இதயபூமியான யாழ்ப்பாணத்தைச் சென்றடையும் வரை சிங்களமயமாக்கலால் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பார்வையிடலாம்.  

சிறிலங்காவின் வடபகுதிக்கான நுழைவாயிலாக உள்ள ஓமந்தை சோதனைச் சாவடியானது 'ஓமந்த' என்ற நிங்கள உச்சரிப்பிலேயே உச்சரிக்கப்படுகின்றது.

ஏ-09 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓமந்தை சோதனைச் சாவடியின் ஊடாகப் பயணிப்பவர்களில் 90 வீதமானவர்கள் தமிழர்களாவர். ஆனால் இங்கு கடமையில் நிற்கும் சிங்கள இராணுவ வீரர் ஒருவரிடமிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு சிங்களத்திலேயே பதில் சொல்ல வேண்டும்.

தமிழ்ப் பிரதேசங்களின் ஊடாகப் பயணித்த போது சிங்கள ஆதிக்கத்தின் மனேநிலையைப் பிரதிபலிக்கின்ற பல்வேறு நடவடிக்கைகளை எம்மால் அவதானிக்க முடிந்தது. அதாவது நாம் சுவாசிக்கும் இடமெல்லாம் சிங்கள வாசம் வீசியது.
 
சிங்கள இராணுவ வீரர்களும் அவர்களது இராணுவ முகாங்களும் தமிழர் பிரதேசங்களில் அதிகம் காணப்படுகின்றன. சிறிலங்கா மக்கள் வாழக் கூடிய 65,619 சதுரகிலோமீற்றரில் 18,880 சதுரகிலோமீற்றர் தமிழ் மக்கள் வாழ்கின்ற வடக்குக் கிழக்குப் பிரதேசமாகும்.

ஆனால் மே 2009 ல் சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் தமிழர் வாழ் பிரதேசங்களில் 7000 சதுரகிலோமீற்றரை பாதுகாப்புப் படையினர் தமது ஆளுகைக்குட்படுத்தியுள்ளனர். இங்கிருந்த 2500 சைவ ஆலயங்களும், 400 கிறிஸ்தவ தேவாலயங்களும் அழிக்கப்பட்டுள்ளன.
 
இவ்வாறு அழிக்கப்பட்ட வணக்க தலங்களை மீளப்புனரமைப்பதற்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்கவில்லை. அத்துடன் இத்தலங்களில் அதிகமானவை முற்று முழுதாக சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்தப் பிரதேசங்களில் உள்ள இராணுவத்தினர் மட்டுமே பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களாவர். ஆனால் கடந்த ஒரு சில ஆண்டுகளில் மட்டும் இந்தப் பிரதேசங்களில் 2500 புத்தர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என உள்ளுர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னார் மாவட்டத்திலுள்ள பிரபலம் மிக்க திருக்கேதீச்சர ஆலயத்திலிருந்து 50 மீற்றர் தொலைவில் மகாதோட்ட இராஜமகா விகாரை என்ற பெயரில் பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டுள்ளது. திருக்கேதீச்சரத்தின் புராதன பெயர் மாதோட்டம் ஆகும்.

இவற்றை தமிழர் வாழ் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் 'வடக்கின் வசந்தம்' என்ற அபிவிருத்தித் திட்டத்தின் கீழேயே சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

அடிக்கட்டுமானப் பணிகள், மின்சாரம், நீர் வழங்கல், விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை அபிவிருத்தி, நன்னீர் மீன்பிடி, சுகாதாரம், விளையாட்டு, கலாசார விடயங்கள், போக்குவரத்து போன்ற பல்வேறு விடயங்கள் 'வடக்கின் வசந்தம்' அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சில பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

எதுஎவ்வாறிருப்பினும், இத்திட்டத்தின் உண்மையான பயனாளிகளாக உள்ள தமிழர்களை இது அதிகம் சென்றடையவில்லை. மாறாக வேலையற்ற சிங்கள இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு கட்டுமானப் பணிகளை மேற்கொள்கின்றனர்.  தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'வடக்கின் வசந்தம்' திட்டத்திற்கான ஒப்பந்தக்காரர்களாக சிங்களவர்களே உள்ளனர்.

அடுத்தது இத்திட்ட அமுலாக்கலில் முக்கிய இடத்தில் பாதுகாப்புப் படைகள் உள்ளன. பாதுகாப்புப் படையினர் வீதிப் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

புதிதாகக் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கான வீடுகளை அமைக்கும் பணி செட்டிக்குளத்தில் இடம்பெற்றுவருகின்றது. மீள்குடியேறியள்ள அனைத்த மக்களுக்கும் இத்திட்டம் மேற்கொள்ளப்படுமானால் இதனை எல்லோரும் வரவேற்பார்கள். ஆனால் மாறாக 75 சிங்களக் குடும்பங்களுக்கு மட்டுமே இந்த வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இவற்றைவிட, கொக்கச்சன்குளம் என்ற இடத்தில் 165 சிங்களக் குடும்பங்கள் புதிதாக குடியேற்றப்பட்டுள்ளனர். தற்போது கொச்சான்குளம் என்பது 'காலபொவசெவௌ' Kalabowasewa எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே மடு வீதியை அண்மித்து உள்ள தமிழ்ச் சிறார்களுக்கான பாடசாலைகள் மிகவும் சேதமடைந்துள்ள இந்நிலையில், இப்பாடசாலைகள் திருத்தப்படாது புதிதாகக் குடியேற்றப்பட்டுள்ள சிங்களச் சிறார்களுக்கான சிங்கள மொழிப் பாடசாலை ஒன்று புதிதாகக் கட்டப்படுகின்றது.

ஆயுதப் படையினரின் அனுமதிகளுடன் தமிழர் பிரதேசங்களில் உள்ள காடுகளில் நுழையும் சிங்களவர்கள் காட்டு மரங்களை பெருமளவில் அரிந்து செல்வதாகவும் இதனால் காட்டு வளம் நாசமாக்கப்படுவதாகவும் உள்ளுர் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தமிழர் வாழ் பிரதேசங்களிற்கு வருகை தரும் சிங்கள தொல்லியல் துறை வல்லுனர்கள் வடக்கில் பெருமளவான பௌத்த சிலைகள் காணப்படுவதாகக் கதைவிடுகின்றனர்.

சிறிலங்காவின் வடக்குப் பகுதியானது சிங்கள மக்களின் பூர்விக இடமா எனத் தற்போது எழுப்பப்பட்டு வரும் சந்தேகங்களைத் தீர்ப்பதை நோக்காகக் கொண்டே தொல்லியல் துறையினர் பொய்ப் பரப்பரைகளை மேற்கொள்கின்றனர்.

சிங்களத்தால் எழுதப்பட்ட  இட அடையாளப் படுத்தும் ஒரு சில பெயர்ப்பலகைகள் காணப்பட்ட வடக்குப் பகுதியில் தற்போது பெருமளவான சிங்களப் பெயர்ப் பலகைகள் காணப்படுகின்றன.

முல்லலைத்தீவு மற்றும் ஏனைய சில பிரதேசங்களில் உள்ளவர்கள் மீன்பிடிக்கச் செல்வதற்கு அனுதிக்கப்படவில்லை. ஆனால் அதேவேளையில் இந்தப் பிரதேசங்களில் உள்ள கடல்களில் சிங்கள மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகின்றார்கள்.  

2009ம் ஆண்டிலிருந்து அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அனைத்து மகஜர்களும் சிங்களத்தில் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என உள்ளுர் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

முன்னர் தமிழ்ப் புலிகளின் நிர்வாகத் தலைமையமாக விளங்கிய கிளிநொச்சி நகரில் உள்ள தெருக்களின் பெயர்கள் மகிந்த ராஜபக்சா மாவத்தை, அலுத் மாவத்தை போன்ற சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டுள்ளன.

ஏ-09 நெடுஞ்சாலையில் உள்ள கனகராயன்குளத்திலிருந்து பிரிந்து செல்லும் மூன்று வீதிகளுக்கு  கொசல பெரேரா வீதி, அனுரா பெரேரா வீதி, வணக்கத்திற்குரிய யற்றிராவன விமல தேர வீதி எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

முதல் இரண்டும் யுத்தத்தில் பங்குகொண்ட இராணுவ வீரர்களின் பெயர்களாகவும், மூன்றாவது வீதிக்கான பெயர் புத்த பிக்கு ஒருவரின் பெயருமாகும்.

இவை எல்லாம் எதனை நோக்கிச் செல்கின்றன? இதற்கான பதிலைக் காலம் மட்டுமே கூறும். 

0 comments:

Post a Comment