Sunday, August 7, 2011

சோமீதரனின் 'முல்லைத்தீவு சகா': கேரள திரைப்பட விழாவில் சிறப்பிப்பு

"கேரளாவில் மட்டுமே இது நடந்திருக்க முடியும்" என 'முல்லைத்தீவு சகா' [Mullaitivu Saga] என்ற படத்தினை உருவாக்கியவரான சிறிலங்காவைச் சேர்ந்த எஸ். சோமீதரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழன் அன்று கேரளாவில் இடம்பெற்ற அனைத்துலக ஆவணப்படம் மற்றும் குறும்பட நிகழ்வில் [International Documentary and Short Film Festival of Kerala] மிகப் பெரும் கடினங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இவரது 'முல்லைத்தீவு சகா' [Mullaitivu Saga] என்ற இவ்வாவணப்படம் நடுவர்களின் சிறப்பு பாராட்டைப் [special mention] பெற்றுள்ளது.

கேரளா முதல்வர் ஓமென் சாண்டி [Chief Minister Oommen Chandy] மற்றும் திரைப்படத்துறை அமைச்சரான கே.பி.கணேஸ் ஆகியோரின் பாராட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரு சில மணித்தியாலங்களிற்கு முன்னர், புலனாய்வுத் துறை அதிகாரிகளால் இப்பட உருவாக்குநரான சோமீதரன் மிரட்டப்பட்டார்.

"கேராளவில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை மீள ஒன்று சேர்க்கும் பணியில் ஈடுபட நான் முயற்சிப்பதாக ஊடகமொன்றில் வந்த செய்தியை அடுத்து நான் புலனாய்வு அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டேன். நேற்று நான் தங்கியிருந்த இடத்திற்கு புலனாய்வு அதிகாரிகள் வந்திருந்தனர். ஆனால் அந்த வேளையில் நான் அங்கிருக்கவில்லை. கைராலி திரையரங்கில் இருந்தேன். பின்னர் எனது திரைப்படத்தின் DVD யைத் தரும்படி அவர்கள் என்னைக் கேட்டார்கள்" என சிறிலங்காவின் வடபகுதியைச் சேர்ந்த உறுதி மிக்க திரைப்படத் உருவாக்குநரான சோமீதரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழனன்று நடைபெற்று முடிந்த திரைப்பட விழாவில் சோமீதரன் பாராட்டப்பட்டுள்ளார். பல்வேறு கடினமான சூழல்களைக் கடந்து இடர்களின் மத்தியில் தனது திரைப்படத்தை திறம்பட இவர் உருவாக்கியுள்ளார்.

இத்திரைப்பட விழாவில் இவரது பெயர் அறிவிக்கப்பட்ட போது தனது ஆசனத்தை விட்டு எழுந்து சிறிது தூரம் நடந்து சென்று பின் மீண்டும் நின்று தனது பெயர் தான் அறிவிக்கப்படுகின்றதா என உறுதிப்படுத்தியபோது சோமீதரன் மிகப் பெரும் ஆச்சரியம் அடைந்ததாகத் தெரிவித்தார்.

"அந்தக் கணத்தை என்னால் உணர்ந்து கொள்ள முடியாதுள்ளது. இங்கிருக்கும் மக்கள் எனது திரைப்படத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதே எனக்குக் கிடைத்த பாராட்டுதலுக்கான காரணமாகும். இந்தப் பாராட்டு என்பது வேறு எங்கும் நடந்திட முடியாது. தமிழ் நாட்டிலும் கூட" என சோமீதரன் தெரிவித்தார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் விளைவாக இழந்த தனது நண்பர்களையும் இவர் நினைவு கூர்ந்தார்.

"இது போருக்குப் பிந்திய காட்சிகள். இவற்றில் பெரும்பாலனவை அதிர்ச்சி தரக் கூடியவை. பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தமது வீடுகள், தொழில்கள், வாழ்வாதாரங்கள் போன்றவற்றை இழந்தனர். விவசாயம், மீன்பிடி போன்றவற்றை மேற்கொள்வதில் பெரும் தடைகள் காணப்படுகின்றன. சிங்களவர்கள் உட்பட சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்த்துப் பேசுகின்ற அல்லது செயற்படுபவர்கள் அனைவரும் அழிக்கப்படுகிறார்கள்" என சோமீதரன் தெரிவித்தார்.

"சில மக்கள் ஐந்து தடவைகளுக்கும் மேல் இடம்பெயர்ந்து பல மாதங்கள் காடுகளில் ஒளிந்து வாழவேண்டியவர்களாகவும் இருந்தார்கள். எனது திரைப்படம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக எடுக்கப்பட்டதல்ல. மாறாக தமிழ் மக்கள் சார்பாக அவர்களது பிரச்சினைகளை வெளிக்கொண்டுவருவதற்கான ஒரு வழியாகவே இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கான காட்சிகள் அனைத்தும் யுத்தப் பாதிப்பிற்குள்ளான இடங்களில் வாழும் எனது நண்பர்களால் எடுக்கப்பட்டவையாகும். இவர்கள் இவற்றை எடுத்த பின்னர் அதற்குள்ளிருக்கும் நினைவக அட்டையை மட்டும் எடுத்துவிட்டு ஒளிப்படக் கருவிகளைத் தூர வீசிவிடுவார்கள். பின்னர் இந்த நினைவக அட்டைகள் பலரது கைகளுக்கு மாறி இறுதியில் என்னை வந்து சேரும்" என சோமீதரன் தெரிவித்தார்.

முதல் மூன்று மாதங்களும் இத்திரைப்படக் காட்சிகளை தன்னால் தொகுக்க முடியாதிருந்ததாக சோமீ குறிப்பிட்டார். "இக்காட்சிகளைப் பார்த்த பின்னர் எங்களால் அவற்றைத் தொகுக்க முடியவில்லை. எங்களால் உண்ணவோ அல்லது உறங்கவோ முடியவில்லை. முதலில் எம்மிடம் ஆறு மணித்தியாலக் காட்சிகள் இருந்தன. அவை பார்ப்பதற்கு மிகப் பயங்கரமானவை. இதில் 30 நிமிடக் காட்சிகளை மட்டுமே உபயோகப்படுத்தியுள்ளேன். ஏனைய ஐந்தரை மணி நேரக் காட்சிகள் அடங்கிய தொகுப்புக்கள் என்னிடம் உள்ளன" என சோமீ தெரிவித்தார்.

சோமீதரன் தனது திரைப்படத்திற்காக இராணுவக் காட்சிகள், ஐ.நாவின் செய்மதி வழி ஒளிப்படங்கள், வலையமைப்புகள் மூலம் நண்பர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட காட்சிகள் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளார்.

29 வயதான திரைப்படத் உருவாக்குநரான சோமீதரன், தனது ஆவணப்படத்திற்கு முல்லைத்தீவு பகுதியில் ஆடப்படும் வீரப்பெண்ணாக சித்தரிக்கப்படும் 'கண்ணகி கூத்தை' குறியீடாகவும் அடிப்படையாகவும் பயன்படுத்தி உள்ளார்.

அழுகுரல்கள், இடப்பெயர்வுகள், சாவுகள், இறந்த உடலங்கள், உதவியற்ற சிறார்களின் முகங்கள் போன்றவற்றை உள்ளடக்கி சோமீதரனால் உருவாக்கப்பட்ட முல்லைத்தீவு சகா ‘Mullaitivu Saga’ என்ற இத்திரைப்படமானது இந்தப் பிரபஞ்சத்தில் வாழும் உணர்வற்ற மனிதர்களைக் கூட உள்ளம் நெகிழ வைத்துவிடும்.

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக சோமீதரனால் உருவாக்கப்பட்ட இரண்டாவது ஆவணப்படமாக இது அமைந்துள்ளது. 47 நிமிட நேரத்திரைப்படமான 'முல்லைத்தீவு சகா' சில ஐரோப்பிய நாடுகள், கனடா போன்றவை உள்ளடங்கலாகப் பல நாடுகளில் காண்பிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழ்கின்ற இவரது நண்பர்கள் தாம் வசிக்கும் நாடுகளுக்கு சோமீதரனை வரும்படி அழைக்கின்றார்கள்.

"நான் எனது தாய்நாட்டிற்குத் திரும்பிச் செல்லவே விரும்புகின்றேன். அது முடியாவிட்டால் இந்தியாவிலாவது எனது வாழ்வைத் தொடரவேண்டும் என நான் விரும்புகின்றேன். கேரளாவின் நில அமைப்பு மற்றும் ஓட்டு வீடுகள் போன்றன எனது தாய்நாட்டின் உணர்வையே எனக்கு ஏற்படுத்துகின்றது. உங்களுக்கு தெரியுமா, நாங்களும் அப்பம், பிட்டு போன்ற உணவுகளையே உண்கின்றோம்" என சோமீதரன் தெரிவித்துக் கொண்டார்.

செய்தி வழிமூலம்: Express News Service, The New Indian Express

1 comments:

நன்று, பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்.

Post a Comment