Friday, August 12, 2011

சிறிலங்கா: போரின் பின் இரண்டாண்டுகள் கழிந்தாலும்..?

சிறிலங்காவில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகள் இன்னமும் நடந்து முடிந்த யுத்த அழிவுகளை மீட்டிக்கொண்டேயிருக்கின்றன. அதாவது இந்த இடங்கள் தொடர்ந்தும் நரகமாகவே உள்ளன.

இவ்வாறு KRISHAN FRANCIS - Associated Press செய்தி நிறுவனத்திற்கு எழுதிய செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்கா தற்போது மீண்டும் உல்லாசப் பயணிகளின் சொர்க்கமாக மாறியுள்ளது என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் தமிழ் மக்கள் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் வாழ்கின்றனர்.

யுத்தம் இடம்பெற்ற பகுதிகள் இன்னமும் நடந்து முடிந்த யுத்த அழிவுகளை மீட்டிக்கொண்டேயிருக்கின்றன. அதாவது இந்த இடங்கள் தொடர்ந்தும் நரகமாகவே உள்ளன.

இராணுவ ஆக்கிரமிப்பு, தமது அன்பிற்குரியவர்களை இழந்தமை என இந்த மக்கள் பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டேயிருக்கின்றனர்.

சிங்களவர்களால் ஆளப்படுகின்ற சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தற்போது தோற்கடிக்கப்பட்டுள்ள தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற குருதி தோய்ந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் விளைவாக பல ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை இழந்துள்ளதுடன், காணாமற் போன உறவுகளைக் கண்டுபிடித்து ஒன்று சேர்க்கும் எந்தவொரு முயற்சிகளும் இதுவரையில் எட்டப்படவில்லை.

பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த உள்நாட்டு யுத்தமானது முடிவிற்கு வந்ததையடுத்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கேற்ப இன்னமும் அரசியல் அதிகாரப் பகிர்வு செயற்படுத்தப்படவில்லை.

"சிறிலங்கா அரசாங்கமானது எந்தவொரு விட்டுக்கொடுப்புக்களையோ அல்லது ஈடுபாட்டையோ காட்டவில்லை" என யூலை மாதத்தில் வெளியிடப்பட்ட அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில் சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் சமாதானம் ஏற்பட்டிருப்பது போன்ற தோற்றப்பாட்டை உலகிற்குக் காட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கமானது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுப்பதாகவும், அவர்களின் சிதறுண்ட வாழ்வை மீள ஒன்றுசேர்ப்பதற்கான வேலைத்திட்டங்களையும் மேற்கொள்வதாகவும் இதனால் தமிழ் மக்கள் பெரும் பயனுற்றுள்ளதாகவும் காட்டிக்கொள்கிறது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சுற்றுலாத்துறை விடயத்தில் தனக்கென தனியிடத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக வானூர்திநிலையங்கள், கப்பற்துறைமுகங்கள், புதிய வீதிகள் போன்றவற்றை அமைக்கும் பணியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

அத்துடன் இராணுவத் தலைமையகம் ஒன்று உள்ள இடத்தை மிக ஆடம்பரமான கடற்கரை விடுதியாக அமைக்குமாறு ஏற்கனவே சிறிலங்கா அரசாங்கம் கட்டளை பிறப்பித்துள்ளது.

ஆனால் வடபகுதியிலுள்ள தமிழ் மக்கள் மத்தியில் சீற்றம் அதிகரித்துள்ளது.

முறிகண்டியில் உள்ள தனது வீடானது இராணுவத்தினர் வசம் உள்ளதால் பாடசாலை நடைபெறும் காலப்பகுதியில், இரவுநேரங்களில் பாடசாலையில் படுத்துறங்குவதாக அதிபர் ஆசிர்வாதம் சூசைநாதர் தெரிவித்துள்ளார்.

இவரது குடும்பத்தினர் முறிகண்டியிலிருந்து 50 மைல்கள் தொலைவில் இருப்பதால் வார இறுதியில் மட்டுமே தனது குடும்பத்தவர்களிடம் செல்ல முடிவதாக அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

படையினரின் வசம் வீடுகள் உள்ளதால் இந்தப்பகுதியில் வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேறிடங்களில் வாழ்வதாகவும், விரைவில் இந்த மக்களின் வீடுகள் கையளிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும் அதற்கான எந்தவொரு முயற்சிகளும் நடைபெறுவதாகத் தெரியவில்லை என அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

"எனது வீட்டில் 106 தென்னை மரங்கள் இருந்தன. ஆனால் தற்போது தேங்காயை நான் பணம்கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. எனது வீட்டை ஒப்படைப்பதாக கடந்த இரு ஆண்டுகளாக இராணுவத்தினர் கூறிக்கொண்டேயுள்ளனர். ஆனால் அவர்கள் தொடர்ந்தும் எனது வீட்டிலேயே வசித்த வருகின்றனர்" என 44 வயதான சூசைநாதர் தொலைபேசி மூலம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.

யுத்தம் உக்கிரம் பெறுவதற்கு முன்னர் விசுவலிங்கம் கோமதி என்பவர் கிளிநொச்சியிலிருந்த தனது வீட்டில் கோழி மற்றும் கால்நடைகளை வளர்த்து அதில் வருமானம் பெற்று வாழ்ந்தார்.

தற்போது புலி உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனை மீட்பதற்காகவும் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை எதிர்நோக்குவதற்காகவும் தனது நகைகள் அனைத்தையும் அடைவு வைத்துள்ளதாகவும் 52 வயதான கோமதி தெரிவித்துள்ளார்.

"எமக்குச் சொந்தமான வீட்டை மட்டும் எம்மிடம் இராணுவத்தினர் கையளிக்க வேண்டும். அதை மட்டுமே நாங்கள் அவர்களிடம் கேட்கின்றோம்" என கோமதி தெரிவித்துள்ளார்.

தமது வீடுகளை ஆக்கிரமித்து வைத்திருக்கும் சிறிலங்கா இராணுவத்தினர் அவற்றில் வடக்கிற்கு அனுப்பப்பட்டுள்ள பெரும்பான்மைச் சிங்களவர்களை குடியேற்றிவிடுவார்களோ என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

இவ்வாறான குடியேற்றங்கள் மூலம் தமிழர்களின் வலுவைக் குறைத்து சிறுபான்மைத் தமிழர்களிடமிருந்து எதிர்காலத்தில் தனித்தாய்நாடு என்ற கோரிக்கையானது புதிதாக எழாமல் தடுக்க முடியும் என்பது சிறிலங்கா அரசாங்கத்தின் எண்ணப்பாடாகும்.

யுத்தத்தின் முன் தனியார்களுக்குச் சொந்தமாக இருந்த இடங்களை இராணுவத்தினர் தம் வசம் வைத்துள்ளதாக தமிழ் கொள்கை வகுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

"நிரந்தரமாக இருக்கின்ற நோக்கிலேயே சிறிலங்கா இராணுவத்தினர் தமது செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். இராணுவத்தினர் நிரந்தர முகாங்களை அமைக்கின்றனர். வடமாகாணத்தின் நிர்வாக அலுவல்களில் அதிகம் தலையீடு செய்கின்றனர்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மின்சார வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வீதிகள் செப்பனிடப்படுகின்றன. சிறப்புச்சந்தைகள், வங்கிகள், இணையத்தளக் கடைகள் என்பன யுத்தம் இடம்பெற்ற பகுதிகளைச் சூழத் திறக்கப்பட்டுள்ளன.

ஆனால் யுத்தத்தின் போது தமது வீடுகளை இழந்த மக்கள் தொடர்ச்சியாக கூடாரங்களிலும், சிறிய குடிசைகளிலும் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் பெரும்பாலான மக்கள் யுத்தத்தின் போது தமது உடைமைகளையும், குடும்பத் தலைவர்களையும் இழந்து வாடுகின்றனர். இதனால் இந்த மக்களின் வாழ்வு பெரும் வறுமை நிலைக்குட்பட்டதாகவே உள்ளது.

மறுபுறம், இராணுவ முகாங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. போரின் போது கொல்லப்பட்ட இராணுவ வீரர்களைக் கௌரவிக்கும் முகமாக, யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் காணப்பட்ட துயிலுமில்லங்கள் முற்றமுழுதாக அழிக்கப்பட்டுள்ளன.

தமிழ்ப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட இடங்களைப் பார்வையிடுவதற்காக கூடுகின்ற சிங்கள சுற்றுலாப் பயணிகளிற்காக சிறிலங்கா இராணுவத்தினர் உணவு விடுதிகளை அமைத்துள்ளனர்.

கடந்த மாதம் சிறிலங்காவின் வடபகுதியில் இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல் பெறுபேறானது, வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி மற்றும் இணக்கப்பாட்டு முயற்சிகளிற்கான சாதகத்தைக் காட்டும் என சிறிலங்கா அரசாங்கம் நம்பியிருந்தது.

ஆனால் தற்போது ஆட்சியிலுள்ள கூட்டணியானது உள்ளராட்சி சபைத் தேர்தலின் போது வடக்கில் தோல்வியுற்றுள்ளது. 25 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது 20 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் இத்தேர்தல் பெறுபேறானது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பிற்கும் மாறாக உண்மையான மக்கள் ஆணையை எடுத்துக் காட்டியது.
இணக்கப்பாடு மற்றும் போரில் பாதிக்கப்பட்டவர்களில் அதிக கரிசனையைக் காட்டுவதாக சிறிலங்கா அரசாங்கம் அடித்துக்கூறுகின்றது.

"துரித மீள்குடியேற்றம், பொருளாதார நடவடிக்கைகள் என்பன மேற்கொள்ளப்படுகின்றது. வெளிப்படையாகப் பல தேவைகள் நிறைவேற்றப்படுகிறது" என ராஜபக்சவின் ஆலோசகரும் கொள்கை வகுப்பாளருமான றஜீவ விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தினர் தனியார் நிலங்களை ஆளுகைப்படுத்தியுள்ளனர் என்பதை றஜீவ விஜேசிங்க மறுத்துள்ளதுடன், உண்மையில் தனியாருக்குச் சொந்தமான நிலங்களை இராணுவத்தினர் தம்வசம் வைத்திருந்தால் அதற்கான நட்டஈடு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தாயாரான ஆனந்தி யுத்தத்தின் போது காணாமற் போன தனது கணவரான சின்னத்துரை சசிதரன் என்பவரைத் தேடிக்கொண்டிருக்கிறார். தமிழ்ப் புலிகளின் அரசியல் துறைத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய இவரது கணவர் மே 18,2009 அன்று இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்ததாகவும் தெரிவித்தார்.

"தனது கணவர் சரணடையத் தயாராக இருக்கவில்லை. அவர் என்னை அனுப்பி விட்டு சயனைட் அருந்த முடிவெடுத்திருந்தார். ஆனால் நான் தான் அவரிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் என்றும் எஞ்சியுள்ள வாழ்வை எம்முடன் அவர் கழிக்க வேண்டும் என்பதால் அவரை இராணுவத்தினரிடம் சரணடையுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்" என ஆனந்தி உள்ளம் நெகிழ்கிறார்.

எழிலன் என நன்கறியப்படும் இவரது கணவர் மற்றும் சரணடைந்த ஏனைய புலி உறுப்பினர்களும் இவர்களது சரணடைவிற்கு மத்தியஸ்தம் வகித்திருந்த கத்தோலிக்க மதகுரு ஆகியோருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாகத் தெரியாது என ஆனந்தி தெரிவித்துள்ளார்.

தனது கணவர் தொடர்பாக சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள், செஞ்சிலுவைச் சங்கம், தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியோரிடம் தான் தெரிவித்த போதிலும் இதுவரையில் எந்தப் பயனும் கிடைக்கவில்லை என ஆனந்தி தெரிவித்தார்.

உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது தம்மிடம் சரணடைந்த 11000 முன்னாள் புலி உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களைத் தாம் மீளவும் அவர்களது குடும்பத்தவர்களுடன் இணைத்துவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், சரணடைந்த தமிழ்ப் புலிகளில் பெரும்பாலானவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது கூடத் தமக்குத் தெரியவில்லை என அவர்களது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

காணாமற் போன தமது உறவுகளை வைத்தியசாலைகள், முகாங்கள் மற்றும் தடுப்பு நிலையங்கள் போன்றவற்றில் தாம் தேடியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

புலிகளால் பலவந்தமாகப் படையில் இணைக்கப்பட்ட தனது மகன் மற்றும் மகள் தொடர்பான செய்திகளை யுத்தம் முடிவுற்ற காலத்திலிருந்து தான் இன்னமும் பெற்றுக்கொள்ளவில்லை என 07 பிள்ளைகளின் தாயாரான சந்தனா முருகையா தெரிவித்துள்ளார். "யுத்தத்தின் போது அவர்கள் உயிர் தப்பினார்களா என்பது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது" என முருகையா தெரிவித்தார்.

உலகில் மிகப் பலம் வாய்ந்த அமைப்புக்களில் ஒன்றாக விளங்கிய தமிழ்ப் புலிகள், சிங்களப் பெரும்பான்மையினரால் ஆளப்படும் சிறிலங்கா அரசாங்கத்தால் சிறுபான்மைத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஓரங்கட்டப்பட்டபோது தமிழர்களுக்குத் தனிநாடு வேண்டி ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

தனித்தாய்நாடு கோரிப் போராடிய புலிகள் அமைப்பானது சனநெருக்கடி மிக்க தொடருந்து நிலையங்களில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டனர்.

அதேவேளையில், சிறிலங்காப் படைகள் போர் வலயங்களில் அகப்பட்டுக் கொண்ட பொதுமக்கள் மீதும், வைத்தியசாலைகள் மீதும் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன் கண்கள் கட்டப்பட்ட நிலையில் நிராயுதபாணிகளாக இருந்த தமிழ்க் கைதிகள் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட காட்சிகள் பிரிட்டனின் சனல் 04 தொலைக்காட்சிச் சேவையால் காண்பிக்கப்பட்டுள்ளன.

யுத்தத்தில் பங்குகொண்ட இருதரப்பினரும் பல போர்க்குற்றங்களை மேற்கொண்டுள்ளதாகவும் இது தொடர்பான அனைத்துலக சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கடந்த ஏப்ரலில் வெளியான ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர் குழு அறிக்கையில் சாட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் இக்குற்றச்சாட்டுக்களைத் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்ற போதிலும், மே 2009 இல் இடம்பெற்ற இறுதிப் போரின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை முதல் முறையாக கடந்த வாரம் சிறிலங்கா அரசாங்கத்தால் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிகக் கொடூரமான யுத்தம் இடம்பெற்ற பின்னர் தற்போது இதயசுத்தியுடனான உள்ளார்ந்தமானதொரு மூலோபாயமானது உண்மையான மீளிணக்கப்பாட்டை உருவாக்கத் தேவையாக உள்ளது என தேசிய சமாதானப் பேரவையின் ஆய்வாளாரான ஜெகன் பெரேரா தெரிவித்துள்ளார். இராணவ ஆட்சி என்பது இதற்குப் பொருத்தமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் சரணடைந்தவர்கள் தொடர்பாக நீதியானதொரு முடிவு அறிவிக்கப்படவேண்டும். அத்துடன் அவர்களுக்கு என்ன நடந்ததென்பது தொடர்பாகவும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும. இது தொடர்பாக தமிழ்க் கொள்கை வகுப்பாளர்கள் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த போதிலும் சிறிலங்கா அரசாங்கம் இது தொடர்பான பதிலை இன்னமும் வழங்கவில்லை" என பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments:

Post a Comment