சிறிலங்கா அரசாங்கத் தொலைக்காட்சி ஊடகவியலாளர் மூலமே சனல்-4 தொலைக்காட்சிக்கு போர்க்குற்றக் காணொலிகள் கிடைத்துள்ளன. ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா வெளியிட்டுள்ள தகவலில் இருந்து இது உறுதியாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
2009 மே 17ம் நாள், போர் முடிவுக்கு வருவதற்கு நான்கு நாட்கள் முன்னதாக, விடுதலைப் புலிகளால் மனிதக்கேடயங்களாக வைக்கப்பட்டிருந்த இலட்சக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டது குறித்த காணொலியை ரூபவாகினி மற்றும் ஐரிஎன், சுவர்ணவாகினி ஆகியவற்றில் ஒளிபரப்புமாறு உத்தரவிட்டதாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கூறியுள்ளார்.
உள்ளூர் அலைவரிசைகளில் ஒளிபரப்பான இந்த காட்சிகள் அடங்கிய காணொலியில் நிச்சயமாக அந்த தொலைக்காட்சிகளின் சின்னங்கள் இடம்பெற்றிருக்கும்.
ஆனால் ஜுலை 27ம் நாள் சனல் -4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய காணொலியில் உள்ளூர் தொலைக்காட்சிகளின் சின்னங்கள் இருக்கவில்லை.
அதில் சனல்-4 தொலைக்காட்சியின் சின்னம் மட்டுமே இருந்தது.
இதிலிருந்து உள்ளூர் தொலைக்காட்சிகளுக்காக ஒளிப்பதிவு செய்யப்பட்ட காணொலிகள் பிரதி எடுக்கப்பட்டு சனல்-4 தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது என்றும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தொலைக்காட்சி குழுவினரே போர்க்களக் காட்சிகளைப் படம்பிடிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, தன் மீதும் உயிரை பணயம் வைத்து போர்க்களக் காட்சிகளை பதிவு செய்த ருபவாகினி ஊடகவியலாளரான சமன்குமார ராமவிக்கிரம மீதும் சிலர் சேறு பூச முனைவதாகவும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா குற்றம்சாட்டியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்க தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான காட்சிகளின் மூலப்பிரதி சனல்- 4 தொலைக்காட்சிக்கு எவ்வாறு கிடைத்தது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில்- அந்தக் காட்சிகளைப் படம்பிடித்த அரச தொலைக்காட்சி ஊடகவியலாளர் ராமவிக்கிரமவே அவற்றை வெளிநாட்டு தொலைகாட்சிகளுக்கு விற்றிருப்பது உறுதியாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, சமன்குமார ராமவிக்கிரம போர்முனையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது புலிகளின் பல மடிக்கணினிகளையும் இலத்திரனியல பொருட்களையும் தனது வாகனத்தில் திருடிக் கொண்டு சென்றபோது மதவாச்சியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரை அரசாங்க தகவல் திணைக்களப் பணிபாளர் லக்ஸ்மன் ஹுலுகல்லவே தலையிட்டு விடுவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment