அவுஸ்ரேலியாவில் நாளை 9ம் நாள் 2011ம் ஆண்டுக்கான சனத்தொகைக் கணக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், இதற்காக வழங்கப்பட்டுள்ள படிவத்தில் 16வது, 18வது வினாக்களுக்கு ‘தமிழ்‘ என்று பதிலளிக்குமாறு அவுஸ்ரேலிய வாழ் தமிழர்களை கேசி (Casey) தமிழ்மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
சனத்தொகைக் கணக்கெடுப்புக்காக வழங்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பும்போது அல்லது இணையத்தில் நிரப்பும் போது,
16வது வினாவான வீட்டில் பேசும் மொழி என்ன? என்ற கேள்விக்கு ‘தமிழ்‘ என்று பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் 18வது வினாவான, உங்களின் பூர்வீகம் என்ன? என்ற கேள்விக்கும் தமிழ் என்று பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த சனத்தொகைக் கணக்கெடுப்பின் முடிவுகள், மத்திய, மாநில, உள்ளூர் அரசாங்கங்களின் அபிவிருத்தி, ஆங்கிலம் அல்லாத பிறமொழி பேசுபவர்களுக்கான சலுகைகள், வசதிகள், உதவிகள் குறித்த முடிவுகளின் பெரும் தாக்கத்தை செலுத்துகின்றன.
இந்தப் படிவத்தில் தமிழ் என்று அடையாளப்படுத்துவதன் மூலம் அவுஸ்ரேலிய வாழ் தமிழர்கள், தமிழ்மொழி, தமிழ்பண்பாட்டை புகட்டும் பாடசாலைகளுக்கு அவுஸ்ரேலிய அரசின் உதவிகள், ஊக்கத்தொகை கிடைக்கச் செய்ய முடியும்.
அத்தியாவசிய சேவைகள் வழங்கும் நிறுவனங்களுடன் தமிழ்மொழிபெயர்ப்பாளருடன் உரையாடுவது அல்லது தகவல்களை தமிழில், பெறுவதற்கும், பொதுநூலகங்களில் தமிழ் நூல்களை வழங்கச் செய்யவும், ,எஸ்பிஎஸ் போன்ற தொலைக்காட்சிகளில் தமிழ்த் திரைப்படங்களை ஒளிபரப்பச் செய்யவும் இதன்மூலம் வழிசெய்யலாம்.
இதுபோன்ற பல நன்மைகளைப் பெற்றுக் கொள்ள உதவக் கூடும் என்பதால், சனத்தொகை கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்யும் போது 16, 18வது வினாக்களுக்கு தமிழ் என்று பதிலளிக்குமாறு கேசி தமிழ்மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
0 comments:
Post a Comment