Monday, August 8, 2011

அமெரிக்கப் போர்விமானங்கள் தற்செயலாகவே நுழைந்தனவாம் – செய்தித்துளிகள்

அமெரிக்காப் போர் விமானங்கள் சிறிலங்காவின் வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தது தற்செயலான சம்பவமே என்றும், இதில் உள்நோக்கங்கள் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் அன்ரூ விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

அமெரிக்க விமானப்படையின் 7ஆவது படையணிக்குச் சொந்தமான 10 போர் விமானங்களைக் கொண்ட அணியொன்று, சிறிலங்கா வான்பரப்பில் 380 கிலோமீற்றர் தூரத்துக்குள் ஊடுருவியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து சம்பந்தப்பட்டவர்களுடன் சிறிலங்கா விமானப்படை தொடர்பு கொண்ட போது, தமது படைப்பிரிவு பயிற்சியில் ஈடுபடுவதாகவும், இதன்போதே தற்செயலாக சிறிலங்கா வான்பரப்புக்குள் விமானங்கள் வந்ததாகவும் அவர்கள் தமக்கு அறிவிக்கப்பட்டதாகவும் குறூப் கப்டன் அன்ரூ விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் வான்எல்லைக்குள் ஊடுருவிய போர் விமானங்களுடன் சிறிலங்கா விமானப்படைத் தலைமையகம் தொடர்பை ஏற்படுத்தி, அது தொடர்பாக அறிவித்ததை அடுத்து அந்த விமானங்கள் எல்லைக்கு வெளியே சென்றுவிட்டதாகவும், இதுதொடர்பாக பதற்றம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சீனா புறப்பட்டார் சிறிலங்கா அதிபர் – அரசுமுறைப் பயணம் இல்லையாம்

சீன அதிபர் ஹுஜின்டாவோவின் அழைப்பின் பேரில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று காலை சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றிருப்பதாக சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவுப் பணிப்பாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

ஆனால் இது ஒரு அரசுமுறைப் பயணம் அல்ல என்றும் அவர் அறிவித்துள்ளார்.

நான்கு நாட்கள் சீனாவில் தங்கியிருக்கும் போது மகிந்த ராஜபக்ச, சீன அதிபர் ஹுஜின்டாவோவை பெய்ஜிங் நகரிலும், சீனப் பிரதமர் வென் ஜியாபோவை சென்சென் நகரிலும் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் பந்துல ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த ஜுன் மாதம் ரஸ்யாவில் சிறிலங்காஅதிபரை சந்தித்த போது அவரை பெய்ஜிங் வருமாறு சீன அதிபர் அழைப்பு விடுத்திருந்ததாகவும், அந்த அழைப்பின் பேரிலேயே இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் சீனப் பயணம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் குழப்பமான தகவல்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார செயலர் காலமானார்

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார செயலர் றொமேஸ் ஜெயசிங்க இன்று காலமானதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரியான அவர், 2009 ஒக்ரோபர் 1ம் நாள் தொடக்கம் கடந்த மார்ச் 28ம் நாள் வரை சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலராக பணியாற்றியிருந்தார்.

இவர் இந்தியா, பெல்ஜியம், லக்சம்பேர்க், ஐரோப்பிய ஒன்றியம், ஆகியவற்றுக்கான தூதுவராகவும், பொன், ஜெனிவா, டாக்கா போன்ற நகரங்களிலுள்ள சிறிலங்கா தூதரகங்களில் இராஜதந்திரியாகவும் பணியாற்றியுள்ளார். 

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஆவணப்படம் வெளிநாடுகளுக்கு

சனல்-4 தொலைக்காட்சியின் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் வகையிலான ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அவற்றை வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும், தூதரகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட மனிதஉரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பாக சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆதாரங்களை முறியடிக்கும் நோக்கில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கடந்தவாரம் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது.

போர்க்குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை- மனிதாபிமான நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டது என்பதை வலியுறுத்தும் வகையில் அந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சனல்-4 குற்றம்சாட்டுவது போன்று சிறிலங்காப் படையினரால் போர்க்குற்றங்கள் ஏதும் இழைக்கப்படவில்லை என்று, அந்த ஆவணப்படத்தில் தளபதி சூசையின் மனைவி, முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மனைவி, தயாமாஸ்ரர் உள்ளிட்டோரை சிறிலங்கா அரசாங்கம் சாட்சியமளிக்கச் செய்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட இந்த ஆவணப்படத்தை தாம் கொழும்பிலுள்ள வெளிநாடுகளின் தூதரகங்களுக்கும், வெளிநாடுகளிலும் உள்ள இராஜதந்திர மையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பொதுசனத்தொடர்புப் பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முல்லைத்தீவு, இரணைமடுவுக்கும் வர்த்தக விமானசேவை

விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு, இரணைமடு விமான ஓடுபாதைகள் புனரமைக்கப்பட்டு வர்த்தக விமானப் போக்குவரத்துகளை மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா விமானப்படை கூறியுள்ளது.

விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட கிளிநொச்சி ஓடுபாதையை புனரமைத்து வர்த்தக விமானப் போக்குவரத்தை ஆரம்பித்துள்ளதாக கூறியுள்ள சிறிலங்கா விமானப்படையின் பேச்சாளர் குறூப் கப்டன் அன்ரூ விஜேசூரிய, இரணைமடு, முல்லைத்தீவு ஓடுபாதைகளும் விரைவில் புனரமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இவற்றையும் வர்த்தக விமானப் போக்குவரத்துக்கு பயன்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா விமானப்படை ஏற்கனவே பெல்-212, பெல் 412 உலங்குவானூர்திகள், வை-12 விமானம் ஆகியவற்றின் மூலம் வர்த்தக விமான சேவைகளை காங்கேசன்துறை, அம்பாறை, திருகோணமலை, அனுராதபுர, பலாலி உள்ளிட்ட பல இடங்களுக்கும் நடத்தி வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment