Thursday, August 11, 2011

தமிழர்களின் உரிமைகளை அங்கீகரித்தல் வேண்டும் : மதநல்லிணக்கவாதிகள்

சிறிலங்கா அரசானது நாட்டின் நலன் கருதி கடந்த காலங்களில் தான் விட்ட தவறுகளின் ஊடாகக் கற்றுக் கொண்ட பாடங்களைக் கொண்டு தனது மனப்போக்கை மாற்றிக் கொள்வதுடன் சமூகத்திலிருந்து விலக்க முடியாத மதத் தலைவர்களின் ஈடுபாட்டையும் உள்ளடக்கி தமிழர்களின் உரிமைகளை அங்கீகரித்தல் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

'நாட்டில் நிலையான சமாதானத்தை நோக்கிய இணக்கப்பாட்டு முயற்சிகளில் எதிர்காலத் தலைவர்களின் பங்களிப்புக்கள்' என்ற தலைப்பில் சிறிலங்காவில் உள்ள கரித்தாஸ் நிறுவனம் இணைந்த Sedec ல் ஒழுங்குபடுத்தப்பட்ட கருத்தரங்கிலேயே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
 
தற்போது ஆட்சியிலுள்ள மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள், மதநல்லிணக்கவாதிகள், புத்தபிக்குகள், மதகுருக்கள், சமூக அமைப்புக்களைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் ஆகியோர் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் அரசியல் தலைவர்களின் குறிக்கோள்கள், தமிழ் மக்களுக்கு கௌரவத்தை வழங்குதல், தேசிய மொழி தொடர்பாக மீள ஆராய்தல், வடக்கில் தற்போது நிலவும் இராணுவ ஆட்சியை நீக்குதல் போன்றன இக்கருத்தரங்கின் பேசுபொருட்களாக அமைந்திருந்தன.  

சிறிலங்காவில் நிலவுகின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டிய விடயம் என்பதை இக்கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்த அனைத்து அரசியல்வாதிகளும் ஏற்றுக்கொண்டனர்.

"சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் அமைதியையும் சமாதானத்தையும் கொண்டுவருவதனை அடிப்படையாகக் கொண்டே இந்நாட்டின் எதிர்கால செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும். இந்நாட்டையும் இந்நாட்டு மக்களையும் முன்னேற்றுவதற்கான பாதைகளை வழிவகுப்பதாக அனைத்த மதங்களின் செயற்பாடுகளும் அமைந்திருக்க வேண்டும்" என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜெயசேகர இக்கருத்தமர்வில் தெரிவித்தார்.

"இவற்றை அடைவதற்காக கடந்த காலங்களில் விட்ட தவறுகளை அடையாளங் கண்டுகொள்ளவேண்டும். மாறாக அவற்றை மூடிமறைத்துவிடக்கூடாது" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தனது கருத்துப் பகிர்ந்து கொண்டார்.

"நாங்கள் புதியதோர் யுகத்தில் காலடி வைக்க வேண்டுமாயின் நாம் அனைவரும் ஒரு நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் ஒன்றாகப் பயணிக்க வேண்டும். இதற்கு மாறாக நாம் தனியொரு கட்சி என்ற அடிப்படையில் செயற்படக் கூடாது" எனவும் இக்கருத்தரங்கின் போது கருத்து  வெளியிட்டிருந்த தமிழ் அரசியல்வாதி தனது கருத்தின் ஊடாக சிறிலங்கா அதிபர் ராஜபக்சவிற்கு செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

"நாங்கள் போரை மட்டுமே வென்றிருக்கின்றோம். உண்மையான சமாதானத்தை இன்னமும் வென்றெடுக்கவில்லை. எமது தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே உள்ளது. அண்மையில் இடம்பெற்ற தேர்தலின் போது, தமிழர்களுக்கு எதிராகப் புதிய பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதை நாம் அவதானித்தோம். வடக்கு மற்றும் தெற்கில் வாழும் இளையோர்களுக்கு நாம் கொடுக்கின்ற செய்தி என்ன? இந்நாட்டில் தமிழ் மக்கள் கௌரவமாகவும், சுதந்திரமாகவும் வாழ்வதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு. இப்போதாவது நாம் அந்த உரிமையை அவர்களுக்கு வழங்கவேண்டும். தேசிய ஒருமைப்பாடு, சம உரிமை என்பன இல்லாத அபிவிருத்தி என்பது ஒரு கற்பனையே" என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற இனப்போரானது நிறைவுற்று இரு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் கூட இங்கு வாழும் மக்களுக்கிடையில் மொழிப் பாகுபாடு நிலவுகின்றது. சிங்கள மொழியானது உத்தியோகபூர்வ மொழியாகவும், நிர்வாக மொழியாகவும் காணப்படுகின்றது. சிறிலங்காவின் அரசியல் உலகில் பயன்பாட்டில் உள்ள ஒரு மொழியாகவும் சிங்களம் மட்டுமே உள்ளது.

"மொழி என்பது அடிப்படையில் பெரிய பிரச்சினையாக உள்ளது. இது ஏனைய பிரச்சினைகள் ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது. தமிழர் ஒருவர் தனது உரிமைக்காகக் குரல் கொடுத்தால் அவர் பயங்கரவாதி எனக் கருதப்படுகிறார். அரசியல்வாதிகள் தமது பரிந்துரைகளை நடைமுறைக்கேற்ப முன்வைக்க வேண்டும்" என ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினரான சுஜீவா சேனசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரோ அல்லது அவரது ஆட்சியோ ஏதாவது தவறு விடும்பட்சத்தில் ஒருபோதும் விமர்சிப்பதில்லை என கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்த கிறீஸ்தவ மற்றும் பௌத்த மதத் தலைவர்களை நோக்கி சேனசிங்க தெரிவித்துக் கொண்டார்.

சிறிலங்காவின் வடபகுதியில் வாழும் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாதுள்ளதாகவும், வடக்கில் பெருமளவில் காணப்படும் இராணுவத்தினராலும் அவர்களது ஆட்சியினாலும் அங்கு வாழும் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்திருப்பதாகவும், இதனால் இம்மக்கள் சொல்லொணத் துன்பங்களை எதிர்கொள்வதாகவும் யாழ் மறைமாவட்டத்தை சேர்ந்த மங்களராஜ் அடிகள்  சுட்டிக்காட்டினார்.

0 comments:

Post a Comment