சிறிலங்கா அரசினால் கடந்த மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பொறுப்புக்கூறும் நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்கா கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அரசின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இது தமக்கு வருத்தமளிப்பதாகவும் கூறியுள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து ஐ.நா உள்ளிட்ட அனைத்துலக சமூகத்துக்கு போதுமானளவு நிரூபித்து விட்டோம் என்றும் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு கேள்விக்கும் போதுமானளவு பதில் கொடுத்து விட்டதாகவும் கூறியுள்ள அவர், சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படவுள்ள பொறுப்புக்கூறும் நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்காவுக்கு நேரடியாகப் பதிலளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தாம் பலமுறை பதில் கூறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா வழங்கியுள்ள எச்சரிக்கையை அரசாங்கம் அற்பமானதாக கருதவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல, அமெரிக்காவின் அறிக்கையை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுவது தவறானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment