விருப்பாட்சி: இதுவரை அடுத்தவர்களுக்காக உழைத்து தேய்ந்துபோன நாம் இனி நமக்காக உழைத்து முன்னுக்கு வரவேண்டும் என்று விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.
விஜய் மக்கள் இயக்கத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விருபாட்சிபுரத்தில் நடந்தது.
அதில் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கலந்துரையாடினர்.
பின்னர் கூட்டத்தி்ல் பேசிய சந்திரசேகர், புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமையவேண்டும், தவறு செய்தவர்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று விஜய் விரும்பினார். அவரது ஆசை ரசிகர்களாகிய உங்கள் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலில் 80 லட்சம் இளைஞர்கள் புதிதாக ஓட்டுப் போட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 50 சதவீதம் பேர் விஜய் ரசிகர்கள் தான்.
இதுவரை அடுத்தவர்களுக்காக உழைத்து தேய்ந்துபோன நாம் இனி நமக்காக உழைத்து முன்னுக்கு வரவேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு ஒரு உள்ளாட்சி அமைப்புக்கு ஒரு உறுப்பினர் வெற்றி பெற்றால்கூட தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 1000 பேர் மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
உங்கள் ஆதரவு மூலம் விஜய் இளைய தளபதியாக வளர்ந்துள்ளார். தற்போது அவர் பெயரை வைத்து நீங்கள் முன்னுக்கு வரவேண்டும். செயலில் கில்லி மாதிரி இருக்கவேண்டும். மக்கள் விழிப்புடன் உள்ளனர். எனவே கொள்ளையடிக்கும் எண்ணத்தில் யாரும் அரசியலுக்கு வரவேண்டாம்.
விஜய் முழுநேர நடிகர்தான். நேரடியாக அவர் அரசியலுக்கு வரமாட்டார். நான்தான் உங்களுக்கு பாலமாக இருப்பேன் என்றார்.Topics: sa chandrasekaran, எஸ்ஏ சந்திரசேகர், tn elections, vijay
0 comments:
Post a Comment