Wednesday, August 3, 2011

சிறிலங்கா: போரில் காணாமற்போன 600 சிறார்கள் என்னவானார்கள்?

சிறிலங்காவின் நீண்ட கால உள்நாட்டு யுத்தமானது நிறைவுக்கு வந்து இரு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் 630 சிறார்கள் தொடர்பான விபரங்கள் அவர்களது இரத்த உறவுகளுக்குத் தெரியாதுள்ளதாக அரசாங்கத் தகவல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1983ல் தமிழ் நாடு கோரிப் போராட்டத்தை ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் சிறிலங்கா அரச படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற நீண்ட கால யுத்தமானது நிறைவுக்குக் கொண்டுவரப்பட்ட மே18 2009 அன்று பெரும்பாலான தமிழ்ச்சிறார்கள் காணாமற்போயுள்ளனர்.
 
இச்சிறார்களில் 64 வீதமானோர் புலிகளின் சிறுவர் ஆட்சேர்ப்பின் போது புலிகள் அமைப்புடன் இணைக்கப்பட்டவர்கள் என யுனிசெப் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டு யுத்தம் இறுதிக்கட்டத்தை அடைந்த போது 300,000 வரையிலான பொதுமக்கள் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வன்னிப் பெருநிலப்பரப்பிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.

யுத்தத்தின் போது தமது சிறார்களைப் பிரிந்த பெற்றோர் தமது பிள்ளைகள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையில் பல இடங்களுக்கு அலைந்து திரிந்த வண்ணமுள்ளனர். "எனது பணியகத்திற்கு வெளியில் அழுதவண்ணமிருந்த அந்தப் பெண்கள் தமது பிள்ளைகளைத் தேடித்தருமாறு என்னிடம் கேட்டார்கள்" என வவுனியா மாவட்டத்தில் உள்ள மூத்த அரசாங்க அதிகாரியான பியன்சியா சாள்ஸ் தெரிவித்தார்.
 
காணாமற்போன பிள்ளைகளின் குடும்பங்களுடன் தொடர்புகளைப் பேணும் பொருட்டு 2009 டிசம்பரில் குழுவொன்று உருவாக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

"காணாமற் போனோர் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்வதென்பது மிகக் கடினமான விடயமாகும். இந்தச் சிறார்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குப் பொருத்தமான பொறிமுறை ஒன்றில்லை. இந்தச் சிறார்களின் பெற்றோர்கள் மிகவும் வேதனையுடன் வாழ்கிறார்கள்" என சாள்ஸ் மேலும் தெரிவித்தார்.

இச்சிறார்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான மேலதிக ஆளணி வளங்கள், பயிற்சிகள், மற்றும் தரவுத் தளம் ஒன்றை உருவாக்குவதற்கான உதவிகள் என்பவற்றை யுனிசெப் நிறுவனம் மேற்கொள்கின்றது. இற்றைவரை இவ்வாறு காணாமற் போன சிறார்களில் 600 பேர் வரையானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும் 13 பேரது விபரங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. அத்துடன் 34 சிறார்களின் பெயர்கள் அவர்களது பெற்றோர்களால் தமது பிள்ளைகளைக் கண்டுபிடித்துத் தரும் பொருட்டு வவுனியாவில் செயற்படும் சிறார்களைத் தேடிக் கண்டுபிடித்து மீளக் குடும்பங்களுடன் இணைக்கும் பிரிவிடம் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சில செயற்பாடுகளின் பின்னர் தற்போது தமது சிறார்களைக் காணவில்லை என அலைந்து திரிந்த பெற்றோர்களின் தொகை குறைந்துள்ளது. ஆனாலும் இது தொடர்பான பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரிலிருந்து 70 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஆலங்குளம் கிராமத்தில் தற்போது  மீளக்குடியேறியுள்ள மூன்று பிள்ளைகளின் தாயாரான குலசேகரன் குகமதி 16 வயதுடைய தனது மூத்த மகனைப் பற்றிய எந்தவொரு செய்திகளும் கிடைக்காது மிகவும் வேதனையில் வாழ்கிறார்.

இந்த விதவைத் தாயின் மூத்த மகன் 2008ன் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் இணைக்கப்பட்டிருந்தார். சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பல ஆயிரக்கணக்கான சிறுவர் போராளிகள் தமிழ்ப்புலிகளால் பலவந்தமாக அவர்களது படையில் இணைக்கப்பட்டிருந்தனர் என சிறுவர் போராளிகளை படையில் இணைப்பதை எதிர்க்கும் அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"2008ம் ஆண்டிலிருந்து இன்னமும் நான் எனது மகன் தொடர்பான எந்தவொரு செய்திகளையும் அறியவில்லை. அவன் எங்காவாது உயிருடன் இருப்பான் என நான் நம்புகின்றேன். அவனைத் தேடுவதற்கான முயற்சிகளை நான் மேற்கொள்ளவேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இதற்கான போதியளவு நேரமோ அல்லது பணவசதியோ என்னிடம் இல்லை" என 44 வயதான குலசேகரன் குகமதி என்ற இந்தத் தாய் தெரிவித்தார்.
 
காணாமற் போன சிறார்கள் தொடர்பான ஏதாவது தகவல்கள் தமக்குக் கிடைக்கும் பட்சத்தில், தரவுத்தளத்தில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு அத்தகவல்கள் சரியாக இருந்தால் உரிய பெற்றோர்களுடன் அவர்களது பிள்ளைகளை மீள இணைத்துவிடுவதாக வவுனியாவிலுள்ள யுனிசெப் நிறுவனத்தின் சிறுவர் பாதுகாப்பு அதிகாரி சஜி தோமஸ் தெரிவித்தார்.

"எமது பிரிவில் சிறார்கள் தொடர்பான தகவல்கள் மட்டுமே முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் ஏனைய காணாமற் போன இளையோர்களின் பெயர்களும் பதிவாகியள்ளன. இதுவரையில் 2000 வரையிலானவர்களின் பெயர்கள் எமது தரவுத்தளத்தில் பதிவாகியுள்ளன" என தோமஸ் மேலும் தெரிவித்தார்.

"இந்த இளையோர் தொடர்பான தகவல்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான அமைப்பொன்றை உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்துவதற்குப் பொருத்தமான நிதி நிறுவனம் ஒன்றை நான் தற்போது தேடிக்கொண்டிருக்கிறேன். இவ்வாண்டின் இறுதிக்குள் இது தொடர்பான சாதகமான பதில் ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என நான் நம்புகின்றேன்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தி வழிமூலம்: IRIN
மொழியாக்கம்: நித்தியபாரதி

0 comments:

Post a Comment