கொழும்பில் இருந்து வெளியாகும் 'சண்டே லீடர்' பத்திரிகையில் வெளிவந்த "சிறிலங்கா அதிபர் மற்றும் அவரது மகன் ஆகியோர் தனிப்பட்ட ரீதியில் செலவழிப்பதற்கென சீனா பெருந்தொகையான நிதியை வழங்கியுள்ளது" என்கின்ற செய்தியை அடுத்து யூலை 19 திகதியன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இப்பத்திரிகையின் இயக்குனரான லால் விக்கிரமதுங்கவை அச்சுறுத்தியுள்ளதை எல்லைகளற்ற ஊடகவியலாளர் சங்கம் [Reporters Without Borders] கண்டித்துள்ளது.
"சிறிலங்கா அதிபர் தொலைபேசி மூலம் பத்திரிகையாளர்களுக்கு நேரடி அச்சுறுத்தல்களை விடுகின்ற செய்தியானது எமக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" எனவும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் சங்கம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் வெளியிடப்படுகின்ற ஒரேயொரு சுயாதீன ஆங்கிலப் பத்திரிகையான சண்டேலீடர் பத்திரிகையானது சிறிலங்கா அதிபரின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
சிறிலங்கா அதிபர் இப்பத்திரிகையில் வெளிவந்த செய்தி தொடர்பாக மறுப்புத் தெரிவிக்க விரும்பியிருந்தால், ஊடகங்களின் ஊடாக இதற்கான பதிலறிக்கை ஒன்றை விடுத்திருக்கலாம்.
இந்த விடயத்தை ஊடகங்கள் மூலம் தெளிவுபடுத்துவதே உண்மையில் ஜனநாயக வழிமுறையாகும்.
"சிறிலங்கா அதிபரின் பொறுப்பற்ற நடவடிக்கையை நாம் கண்டிக்கிறோம். ஒரு நாட்டினுடைய தலைவர் தனது மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழவேண்டியவராவார். ஆனால் மகிந்த ராஜபக்ச மிகவும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். ஊடக சுதந்திரத்தில் தலையீடு செய்கின்ற தனது கொள்கையை மகிந்த ராஜபக்ச உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்" என எல்லைகளற்ற ஊடகவியலாளர் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"ராஜபக்சா குடும்பத்து உறுப்பினர்களால் ஊடகவியலாளர்கள் மிரட்டப்படுகின்ற சம்பவம் இது மட்டுமல்ல. இதற்கு முதலும் இவ்வாறான பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற இது போன்ற அச்சுறுத்தல் சம்பவங்களை உடனடியாகக் கைவிடுமாறு நாம் சிறிலங்கா அதிபர் மீத அழுத்தத்தைப் பிரயோகிக்கின்றோம். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுமிடத்து சிறிலங்காவிலுள்ள அனைத்து ஊடகங்களும் ஒன்று சேர்ந்து தமது கண்டனங்களைத் தெரிவிக்கவேண்டும் எனவும் எல்லையற்ற பத்திரிகையாளர் சங்கம், அனைத்து சிறிலங்கா ஊடகங்களிடமும் வேண்டிநிற்கின்றது" எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூலை 19 அன்று விக்கிரமதுங்க, சிறிலங்கா அதிபர் ராஜபக்சவிடமிருந்து தொலைபேசி அழைப்பைப் பெற்றுக்கொண்டபோது, அதிபரால் விடுக்கப்பட்ட மிரட்டல் செய்தி பின்வருமாறு:
"பொய்யான செய்திகளை பிரசுரிக்கிறீர்கள். இவை அனைத்தும் மூர்க்கத்தனமானவை. உங்களது செய்திகள் மூலம் அரசியல் ரீதியான தாக்குதல்களை என்மீது மேற்கொள்ள முடியும். நீங்கள் என்னைத் தனிப்பட்ட ரீதியில் தாக்க நினைத்தால், உங்களை எவ்வாறு தனிப்பட்ட ரீதியில் தாக்குவது என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்"
'பொய் பேசவேண்டாம்', 'கடவுள் உங்களைத் தண்டிப்பார்' போன்ற வாசகங்கள் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட துண்டுப்பிரசுரங்கள் சண்டேலீடர் பத்திரிகையின் தலைமைச் செயலக மதில்களில் ஒட்டப்பட்டிருந்தன.
சிறிலங்கா அதிபரின் தொலைபேசி மிரட்டல் மேற்கொள்ளப்படுவுதற்கு இரு நாட்களின் முன்னர் சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிறட்றிக்கா ஜான்ஸ் தனது பத்தியில், சீனாவானது சிறிலங்கா அதிபர் தனிப்பட்ட ரீதியில் செலவழிப்பதற்காக 09 மில்லியன் டொலர்களையும் அவரது மகனுக்கு அரை மில்லியன் டொலர்களையும் மானியமாக வழங்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பான தெளிவான பதிலை சிறிலங்கா அதிபருக்கு வழங்கும் முகமாக சண்டேலீடர் பத்திரிகையின் நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
சண்டேலீடர் பத்திரிகையானது நீண்டகாலமாக சிறிலங்கா அரசாங்கத்தால் குறிவைக்கப்பட்டுள்ள ஒரு பத்திரிகையாகும்.
லால் விக்கிரமதுங்காவிற்கு முன்னர் இப்பத்திரிகையின் இயக்குனராகச் செயற்பட்ட லசந்த விக்கிரமதுங்க 08,ஜனவரி 2009 அன்று படுகொலை செய்யப்பட்டார்.
இப்படுகொலை தொடர்பான எந்தவொரு விசாரணைகளும் முற்றுமுழுதாக நிறைவுசெய்யப்படவில்லை. இக்கொலையுடன் தொடர்புபட்ட எந்தவொரு குற்றவாளிகளும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.
லசந்த விக்கரமதுங்காவின் படுகொலை தொடர்பான முறையான விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என எல்லைகளற்ற ஊடகவியலாளர் சங்கம் மீண்டும் வலியுறுத்துகின்றது.
லசந்தவின் படுகொலையைத் தொடர்ந்து அவரது சகோதரனான லால் விக்கிரமதுங்க தற்போது இப்பத்திரிகையின் இயக்குனராகப் பொறுப்பேற்றுச் செயற்படுகின்றார். லால் விக்கிரமதுங்கவும் தற்போது குறிவைக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment