Wednesday, August 3, 2011

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை – கருத்து வெளியிட ஐ.நா மறுப்பு

அண்மையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட மனிதாபிமானப் போரின் உண்மைசார்ந்த பகுப்பாய்வுகள் என்ற அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட ஐ.நா மறுத்துள்ளது.

நியுயோர்க்கில் நேற்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கியிடம் செய்தியாளர்கள் இதுபற்றிக் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்குப் பதிலளித்த அவர், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை அதிகாரபூர்வமாக ஐ.நாவிடம் கையளிக்கப்பட்டதா என்பது குறித்து பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளதுடன், இதுதொடர்பாக கருத்து எதையும் வெளியிட முடியாது என்றும் கூறியுள்ளார்.

ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பாக சிறிலங்கா அரசிடம் இருந்து ஐ.நாவுக்கு அதிகாரபூர்வமான எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, பொறுப்புக்கூறும் செயற்பாடுகள் குறித்து சிறிலங்கா எவ்வாறு பதிலளிக்கிறது என்பது குறித்து அனைத்துலக சமூகம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment