Monday, July 25, 2011

தென் கொரியாவில் 50 திரையரங்குகளில் வெளியாகிறது ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன்.

ஷங்கர் இயக்கிய எந்திரன் படம் கடந்த ஆண்டு இந்தியா மற்றும் உலகின் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியானது. வசூலில் இந்தப் படம் புதிய சாதனை படைத்தது. இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படம் எந்திரன்தான்.

இப்போது இந்தப் படத்தை, இதுவரை வெளியாகாத நாடுகளில் மறுவெளியீடு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது ஈராஸ் நிறுவனம். வெளிநாடுகளில் விநியோகிக்கும் உரிமையை ஈராஸ்தான் பெற்றுள்ளது.

முதல்கட்டமாக தென் கொரியாவில் மட்டும் 50 திரையரங்குகளில் எந்திரனை வெளியிடப் போவதாக ஈராஸ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் குமார் அகுஜா கூறுகையில், "இதுவரை நாங்கள் கால் பதிக்காத புதிய பகுதிகளில் இந்தியப் படங்களை வெளியிடும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். இந்தியப் படங்களே வெளியாகாத தைவானில் முதல் முறையாக ஷாரூக்கான் நடித்த 'ரா ஒன்' படத்தை வெளியிடுகிறோம்.

அடுத்து தென் கொரியாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படத்தை 50 திரையரங்குகளில் வெளியிடுகிறோம். எந்திரனின் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு பதிப்புகள் இந்த அரங்குகளில் வெளியாகும்," என்றார்.

தென் கொரிய மக்களுக்கு ரஜினி படம் புதிதல்ல. அங்கு ஏற்கெனவே ரஜினி நடித்த சந்திரமுகி மற்றும் சிவாஜி தி பாஸ் படங்கள் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றன.Topics: enthiran, ரஜினி, எந்திரன், தென் கொரியா, ஈராஸ், south korea, eros

0 comments:

Post a Comment