July 2, 2011 | no commentsசெப்டம்பர் 11,2001 தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்கா தொடுத்த போர்களால் இதுவரை 2,25,000 உயிர்ப் பலி ஏற்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஈராக், ஆப்கானிஸ்தானில் தொடுத்த போர்கள் மற்றும் பாகிஸ்தானிலும் ஏமனிலும் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது பிரவுன் பல்கலைக்கழகம்.அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்களில், சுமார் 2,25,000 பேர் உயிரிழந்துள்ளனர்; 3,65,000 பேர் காயமடைந்துள்ளதாக இந்த ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் அமெரிக்கர்கள் சுமார் 6,000 பேர் உள்பட 31,741 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இதில், ஈராக்கியர்கள் 9,900 பேர், ஆப்கானியர்கள் 8,800 பேர், பாகிஸ்தானியர்கள் 2,300 பேர் மற்றும் 2,300 அமெரிக்க தனியார் பாதுகாப்பு அதிகாரிகளும் அடங்குவர்.
இந்தத் தாக்குதல்களில் இதுவரை பலியான சிவிலியன்களின் எண்ணிக்கை 1,72,000. இதில், 1,25,000 ஈராக்கியர்களும், 35,000 பாகிஸ்தானியர்களும், 12,000 ஆப்கானியர்களும் பலியாகியுள்ளனர்.
மேலும், 168 பத்திரிகையாளர்கள் மற்றும் 266 தன்னார்வ தொண்டு ஊழியர்களும் இறந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கப் போர்களால் இதுவரை 78 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
செப்டம்பர் 11 சம்பவத்துக்குப் பிறகு, அமெரிக்காவால் தொடுக்கப்பட்ட போர்களுக்கு இதுவரை 4.4 டிரில்லியன் டாலர்கள் அளவில் செலவிடப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
இவை அனைத்தும் அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள மதிப்பீடுகளைக் காட்டிலும் மிக அதிகம் என்பது கவனத்துக்குரியது.
0 comments:
Post a Comment