Wednesday, June 29, 2011

4000 கோடியில் வரும் புதிய கார் தொழிற்சாலை

June 30, 2011 | no commentsசென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டில் ஒருங்கிணைந்த கார் தயாரிப்பு தொழிற்சாலை அமைகிறது.  இதற்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு அளிக்கும் என்று பிரான்ஸ் நாட்டு உயர்மட்ட அதிகாரக் குழுவிடம் முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்தார்.

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முதல்வர் ஜெயலலிதாவை நேற்று தலைமை செயலகத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பி.எஸ்.ஏ. பியூஜியாட் சிட்ரியான் நிறுவனத்தின் ஆசிய சிறப்பு செயல்பாடுகள் தலைமை செயல் அதிகாரி கிரிகோரி ஆலிவர், இந்திய திட்டங்களின் மேலாண்மை இயக்குனர் பிரெடரிக் பேபர், பிளாக் ஸ்டோன் நிறுவனத்தின் முதுநிலை மேலாண்மை இயக்குனர் ஜிதேஷ் காதியா, மனிதவள மேம்பாடு துணைத் தலைவர் சஞ்சு சாகா, அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சசிகாந்த் வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட அதிகாரக் குழு சந்தித்து, காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டில் ஒருங்கிணைந்த கார் தயாரிப்பு தொழிற்சாலை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

மாநில அரசின் ஆதரவு

அப்போது முதல்வர் ஜெயலலிதா அந்தக் குழுவினரிடம் கூறுகையில், கார் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க தமிழ்நாடு மாநிலத்தை தேர்வு செய்ததற்காக பி.எஸ்.ஏ. நிறுவன அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். இந்த தொழிற்சாலை விரைந்து தொடங்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தொழில்துறை அமைச்சர், தலைமை செயலாளர், தொழில் துறையின் முதன்மைச் செயலாளர், சிப்காட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன செயல் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள்

பாரிஸை தலைமையிடமாகக் கொண்ட பி.எஸ்.ஏ. ஆட்டோமொபைல் நிறுவனம் ‘பியூஜியாட்’, ‘சிட்ரியான்’ ஆகிய பெயர்களில் கார்கள், மோட்டார்கள் சைக்கிள்கள் விற்பனை செய்து வருகிறது. கார் உற்பத்தியில் ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய நிறுவனமாகவும், உலகத்தில் 6-வது பெரிய நிறுவனமாகவும் பி.எஸ்.ஏ. நிறுவனம் இருக்கிறது. கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தின் வர்த்தகம் (விற்றுமுதல்) ரூ.3 கோடியே 9 லட்சத்து 556 கோடிகள் ஆகும்.

பி.எஸ்.ஏ. நிறுவனம், ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தொழிற்சாலையை உருவாக்க ஆர்வமாக உள்ளது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் கார்களை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் விற்க திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக இந்த நிறுவனத்தின் அதிகாரிகள், இந்தியாவின் பல மாநிலங்களுக்கு சென்று ஆலோசனை நடத்தினார்கள்.

இறுதியாக, சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகே கார் தொழிற்சாலைக்கான இடத்தை தேர்வு செய்துள்ளனர். சென்னையில் சிறந்த சுற்றுச்சூழல், கார் தயாரிப்புக்கு தேவையான உதிரி பாகங்கள் சப்ளை, தேவையான அளவு மனிதஆற்றல், துறைமுக வசதி ஆகியவை இருப்பதாக கருதும், பி.எஸ்.ஏ. நிறுவனம், எல்லாவற்றிற்கும் மேலாக, மாநில அரசின் ஆதரவு அவசியம் என்று கருதுவதால் அந்த நிறுவனத்தின் உயர்மட்ட குழுவினர், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மாநில அரசு முழு ஆதரவு மற்றும் உதவி அளிப்பதுடன், கார் தயாரிப்பு தொழிற்சாலைக்கு தேவைப்படும் நிலத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

ஸ்ரீபெரும்புதூர் அருகே இந்த கார் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவப்பட்டால் 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 15 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். அத்துடன் பிரான்ஸ் நாட்டின் ஏராளமான கார் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்களையும் இந்த நிறுவனம் ஈர்க்கும். அதன்மூலம் தமிழ்நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.

-இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment