Wednesday, June 29, 2011

மோசமான ஆட்டத்துடன் குட்பை சொன்ன ஜெயசூர்யா

June 29, 2011 | no commentsஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் கடும் அதிருப்தி, எதிர்ப்புகளை மீறி ஒரு நாள் போட்டிக்கான அணியில் இடம்பெற்ற முன்னாள் கேப்டன் ஜெயசூரியாவுக்கு கசப்பான அனுபவமாக அமைந்து விட்டது அவர் ஆடிய கடைசி ஒரு நாள் போட்டி.

இந்தப் போட்டியிடுன் கிரிக்கெட்டுக்கு குட்பை சொல்லி விட்டார் ஜெயசூர்யா. முன்னதாக ஜெயசூரியாவை ஒரு நாள் தொடருக்கான அணியில் சேர்க்க மூத்த வீரர்கள் பலரும் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர். ஆனால் அதையும் மீறி ஜெயசூரியாவை அணிக்குள் நுழைத்தனர். இந்த ஜெயசூரியா, ராஜபக்சே கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.பி. என்பதால், அரசியல் செல்வாக்கு காரணமாக உள்ளே புகுந்தார் ஜெயசூரியா. ஆனால் அணி வீரர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பைப் பார்த்து அதிர்ந்து போன அவர், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் மட்டும் தான் விளையாடப் போவதாகவும், அதன் பின்னர் ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார்.

இந்த நிலையில் இங்கிலாந்து, இலங்கை இடையிலான ஒரு நாள் போட்டித் தொடர் லண்டனில் தொடங்கியது. முதல் போட்டியில் விளையாடிய இலங்கைக்கு மிகப் பெரிய அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆண்டர்சன்.

மழை காரணமாக போட்டி 32 ஓவர்கள் கொண்டதாக மாற்றப்பட்டது. இங்கிலாந்து அணி முதலில் ஆடி 290 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இலங்கை ஆடத் தொடங்கியது. திருத்தப்பட்ட இலக்குப்படி 232 ரன்களை எடுக்க வேண்டிய நிலையில் இலங்கை இருந்தது. ஆனால் ஆண்டர்சனின் அபாரப் பந்து வீச்சால் இலங்கை சிதறிப் போனது. 4 விக்கெட்களை வீழ்த்திய ஆண்டர்சனால், இலங்கை அணி 121 ரன்களில் சுருண்டு, 110 ரன்கள் வித்தியாசத்தில் கேவலமான தோல்வியைத் தழுவியது.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஜெயசூரியாவின் ஆட்டம்தான். தனது ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிப் போட்டியை ஆட வந்த அவர் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். டிம் பிரஸ்னன் பந்து வீச்சில், இயான் மார்கனிடம் பிடி கொடுத்து நடையைக் கட்டினார் ஜெயசூரியா.

2 ரன்களில் ஆட்டமிழந்தாலும் இது அவருக்குக் கடைசிப் போட்டி என்பதால் மைதானத்தில் கூடியிருந்த அத்தனை பேரும் எழுந்து நின்று கை தட்டி வழியனுப்பி வைத்தனர். முன்னதாக பந்து வீச்சின்போது ஜெயசூர்யா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இருப்பினும் இந்தப் போட்டி எந்த வகையிலும் ஜெயசூர்யாவுக்கு மகிழ்ச்சியைத் தராத ஒன்றாக முடிந்தது குறிப்பிடத்தக்கது.

நாளை ஜெயசூர்யாவுக்கு 42 வயது பிறக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது கடைசிப் போட்டியை கசப்பான உணர்வுகளுடன் முடித்துள்ளார் ஜெயசூர்யா. ராஜபக்சே கட்சியின் எம்.பி என்ற ஒரே காரணத்திற்காக அணியில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு, இத்தனை நாட்கள் சம்பாதித்து வைத்திருந்த நற்பெயரை ஒரே நாளில் சக வீரர்களிடமே கெடுத்துக் கொண்டவர் ஜெயசூர்யா என்பது நினைவு கூறத்தக்கது.

0 comments:

Post a Comment