Sunday, July 17, 2011

கிழக்கில் ஆயுதங்களை ஒப்படைக்க 30ம் திகதி வரை காலக்கெடு

கிழக்கு மாகாணத்தில் செயற்படும் ஆயுதக் குழுக்கள் அவற்றிடமுள்ள ஆயுதங்களை விரைவாக ஒப்படைக்க வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு மூலம் பொலிஸ் நிலையங்கள் ஊடாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில், கொள்ளை நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்காக சில குழுக்கள் ஆயுதங்களை வைத்திருப்பதாகவும் சில குழுக்கள் சில அரசியல் கட்சிகளுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுவருகின்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேச பொலிஸ் நிலையங்கள் ஊடாகவும் ஒலிபெருக்கி மூலம் பொலிஸார் இந்த அறிவிப்பை செய்துவருகின்றனர்.

ஆயுதங்கள் வைத்திருப்போர் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் தங்களது பகுதிகளில் இருக்கும் விசேட அதிரடிப்படை முகாம் மற்றும் இராணுவ முகாம்களில் ஆயுதங்களை கையளிக்கலாம் என பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆயுதங்களை வைத்திருப்போர் அதனை நேரடியாக கொண்டுவந்து ஒப்படைக்க முடியாதவிடத்து அதனை ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டு அறிவித்தால் அந்த ஆயுதங்களும் மீட்க்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அவ்வாறு ஆயுதங்கள் கையளிக்கப்படாதவிடத்து அவை பற்றிய தகவல்கள் கிடைத்து மீட்க்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment