Sunday, July 17, 2011

வாக்களிக்க இராணுவ அடையாள அட்டை

வடக்கில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் இராணுவத்தினரால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை மீண்டும் பயன்படுத்தி வாக்களிப்பில் கலந்துகொள்ள அனுமதி வழங்குவது தொடர்பாகத் தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடவுள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹண ஹெட்டியாராய்ச்சி இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:

வடக்கில் தேர்தல் வன்முறைச்சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்று ஜே.வி.பியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் குற்றஞ்சாட்டியுள்ளன. இது தொடர்பாக அரசும் தேர்தல் ஆணையாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேர்தல் கண்காணிப்பாளர்கள் என்ற வகையில் தேர்தல் அமைதியாக இடம்பெறவேண்டும் என்பதே எமது விருப்பம். தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அரசோ, எதிர்க்கட்சிகளோ மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தேர்தல்மீது வடக்கு மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்கச் செய்யக்கூடாது.

யுத்தம் முடிவடைந்து ஒருசில வருடங்களுக்குள்ளேயே தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் சுதந்திரமும் வடக்கு மக்களுக்கு இருக்கவேண்டும். இந்த சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதிக்கும் வகையில் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் அமையக்கூடாது.

கிளிநொச்சியில் தொடர்ந்தும் மீள்குடியமர்வு இடம்பெறுகின்றது. அது இன்னும் முடிவடையவில்லை. இவர்களில் தேசிய அடையாள அட்டைகள் இல்லாத பலரும் உள்ளனர். அவர்கள் தற்காலிக அடையாள அட்டைகளைப் பயன்படுத்தலாம். தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கும் நடவடிக்கை இந்த மாதம் 13 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளதால் அதிகம் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த மக்களுக்கு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை இந்த மக்கள் ஒருதடவை வாக்களிப்புக்குப் பயன்படுத்தினர்.தேசிய அடையாளஅட்டை இல்லாதவர்கள் இந்த இராணுவ அடையாள அட்டைகளைப் பயன்படுத்த அனுமதி வழங்குவது தொடர்பாக நாம் தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்தாலோசிக்கவுள்ளோம் என்றார்.

0 comments:

Post a Comment