Sunday, July 17, 2011

உண்ணாவிரதமிருந்த சிறைக்கைதி வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா சிறைச்சாலையில் நேற்றுடன் ஏழாவது நாளாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்ற நான்கு அரசியல் கைதிகளில் ஒருவருடைய உடல் நிலைமை மோசமடைந்துள்ளதையடுத்து, சிறைச்சாலை வைத்தியர்கள் அவரை வவுனியா பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள் என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

செட்டிகுளத்தைச் சேர்ந்த கட்டையர் லோகேஸ்வரன் என்ற 40 வயதுடைய அரசியல் கைதியே இவ்வாறு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

உண்ணாவிரதம் இருந்து வரும் நால்வரும் தாங்கள் நிரபராதிகள் என்றும் தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதுடன், இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று சமூகத்தில் இணைக்கப்பட்டவர்களை மீண்டும் கைது செய்து தடுத்து வைப்பது நிறுத்தப்பட வேண்டும் எனவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் அல்லது அவர்களுக்கு எதிரான விசாரணைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்பதே உண்ணாவிரதம் இருப்பவர்களின் கோரிக்கையாக உள்ளது.

இவர்களில் ஒருவர் இராணுவத்தினரிடம் சரணடைந்து தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நால்வருக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியாவில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 40 பேர் இந்த உண்ணாவிரதத்தில் இணைந்துள்ளார்கள்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பவர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் வினோ நோகராதலிங்கம் ஆகியோர் இரண்டாவது தடவையாக சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டுள்ளதுடன் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு உடனடியாகத் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரியிருக்கின்றனர்.

இதற்கிடையில், தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து வருகின்ற இந்தத் தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் பார்வையிட்டுள்ளார்.

உண்ணாவிரதம் இருப்பவர்களின் கோரிக்கை தொடர்பாகக் கவனம் செலுத்தப்படும் என்றும் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறும் கைதிகளிடம் அவர் கேட்ட போதிலும், சிறைக்கைதிகள் தமது உண்ணாவிரதத்தை உடனடியாகக் கைவிடுவதற்கு மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment