மட்டக்களப்பு மாவட்டத்தின் இருவேறு பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்லிக்குளம் பகுதியில் நேற்றிரவு 6.45மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மண்முனைக்கு செல்லும் ஒல்லிக்குளம் வீதியில் உள்ள சந்தியில் இடம்பெற்ற இந்த விபத்தில் பண்டாரியாவெளியை சேர்ந்த கருணா (30வயது) என்ற குடும்பஸ்த்தரே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடியில் வீடுகட்டும் பணியில் கூலித்தொழிலாளியாக வேலைசெய்துவிட்டு தனது முதலாளியின் மோட்டார் சைக்கிளை செலுத்திக்கொண்டு வீடு செல்லும்போது சந்திப்பகுதியில் வேகமாக சைக்கிளை திருப்ப முனைந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் கழுத்துப்பகுதி மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் நசியுண்ட நிலையில் அவ்விடத்தில் இருந்த பொதுமக்களால் ஆரையம்பதி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது வழியிலேயே அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் ஆரையம்பதி வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேநேரம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த காத்தான்குடியை சேர்ந்த இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பிலான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
0 comments:
Post a Comment