Sunday, July 17, 2011

இலங்கை தொடர்பான விடயங்களை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது

இலங்கை, இஸ்ரேல், அமெரிக்கா போன்ற ரோம் சாசனத்தில் கைச்சாத்திடாத நாடுகள் தொடர்பான விடயங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சாங் கியூன் சோங் கூறியுள்ளார்.

இலங்கை யுத்தத்தின் இறுதி நாட்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இலங்கை என்பன ரோம் சாசனத்தில் கைச்சாத்திட்டிருக்கவில்லையென்று தெரிவித்துள்ளார்.

ஆதலால் ஐ.நா. பாதுகாப்புச் சபையினால் நீதிமன்றத்திற்கு விடயத்தை பாரப்படுத்தாமல் சர்வதேச நீதிமன்றம் அந்த விடயம் தொடர்பாக செயற்பட முடியாது என்று அவர் தெரிவித்ததாக த அவுஸ்திரேலியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

அதேசமயம் தேசிய சட்ட முறைகளுக்கு மேலான முறையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இயங்குவதாக அவர் கூறியுள்ளார்.

குற்ற நீதிக்கான தேசிய முறைமைகளை தனது நீதிமன்றம் கொண்டிருப்பதாகக் கூறியுள்ள சோங், ஆனால், சில விமர்சகர்கள் குறிப்பாக அமெரிக்கா, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை தேசிய இறைமைக்கு அச்சுறுத்தலென வர்ணித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அவ்வாறான அச்சுறுத்தல் இருந்தால் 116 நாடுகளில் அந்த அச்சுறுத்தல்கள் சிறியளவிலான தாக்கத்தையே கொண்டிருக்குமென்று அவர் தெரிவித்துள்ளார்.

கொள்கை ரீதியின் பிரகாரம் இந்த நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அதிகாரத்தை அளித்துள்ளன. தமது ஆயுதப் படைகளின் செயற்பாடு தொடர்பாக தீர்ப்பை வழங்குவதற்கு அவை அங்கீகாரமளித்திருக்கின்றன.

நீதிமன்றத்தின் பங்களிப்புத் தொடர்பாக தவறான புரிந்துணர்வின் அடிப்படையிலேயே தேசிய இறைமை பற்றிய சகல கவலைகளும் காணப்படுவதாக சோங் கூறியுள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது இறுதியாக தஞ்சமடையும் இடமாக உள்ளது. போர்க் குற்றங்களுக்கான சிறப்பு விடுபாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதை அதன் சட்ட பரிமாணம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கின்றது. அத்துடன், இதேபோன்ற பாரதூரமான குற்றச்செயல்களும் சிறியளவிலேயே உள்ளன என்று அவர் கூறுகிறார்.

ரோம் சாசனத்தை அங்கீகரித்துள்ள நாடுகளின் விடயங்களையே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கையாள முடியும். அதேவேளை, தேசிய சட்ட முறைமைகள் செயற்பட முடியாத தன்மையைக் கொண்டிருந்தால் அல்லது விருப்பமின்றியிருந்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் நடவடிக்கையெடுக்க முடியும்.

இறைமையுள்ள நாடுகளின் தேசிய எல்லைகளுக்கப்பால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது எந்தவொரு சூழ்நிலையிலும் மேலாகச் சென்றுவிட மாட்டாது, செல்ல முடியாது,செல்லக்கூடாது. அத்துடன், இறைமையுள்ள நாடொன்றின் சட்ட முறைமையின் வழமையான செயற்பாட்டை பாதிக்கும் விதத்தில் செயற்பட முடியாது என்று சோங் கூறியுள்ளார்.

தேசிய சட்ட முறைமையின் நடவடிக்கைக்கு வெளிப்புறமாகவே அடிப்படையில் நாங்கள் இருந்து வருகிறோம். விருப்பமில்லாத தன்மை அல்லது இயலாத தன்மை ஏற்படும்வரை காத்திருக்கின்றோம் என்று அவர் கூறியுள்ளார்.

சிட்னியில் கடந்த வாரம் இடம்பெற்ற பொதுநலவாய சட்ட அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு தென்கொரியாவின் முன்னாள் ஜுரரும் கொரிய இராணுவத்தின் முன்னாள் நீதிபதி, சட்டத்தரணியுமான சோங், த அவுஸ்திரேலியன் பத்திரிகையுடன் உரையாடியுள்ளார்.

கடந்த ஒரு வருடமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் பொதுநலவாய அமைப்பிற்குமிடையே இடம்பெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை இரு அமைப்புகளும் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அங்கீகாரமளித்துள்ளன.

2002 இல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டது. நான்கு வருடங்களில் 66 நாடுகள் அங்கீகரித்திருந்தன. மேலும், பல நாடுகள் விரைவில் இணைந்துகொள்ளவுள்ளன. இந்த விடயத்தில் நாங்கள் முன்னேற்றமடைந்து வருகிறோம்.

துனீசியா இந்த சாசனத்தில் கடைசியாக கைச்சாத்திட்டுள்ளது. அரபுலகில் கைச்சாத்திடப்பட்ட முதலாவது நாடாக துனீசியா உள்ளது. எகிப்தும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தைச் சாராத தரப்பினரால் மேற்கொள்ளப்படும் சர்வதேச பயங்கரவாத நடவடிக்கைகளை கையாளுவதற்கு நீதிமன்றத்திற்கு முடியாத தன்மை காணப்படுகிறது. அதனால் அந்த விடயம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் கைவிடப்பட்ட விடயங்களில் ஒன்றாகும்.

மற்றொரு கைவிடப்பட்ட விடயமாக இருப்பது இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஆவணப்படுத்தப்பட்ட விடயமாகும். இந்த விடயங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டப் பரிமாணத்திற்கு அப்பாற்பட்டவையாக உள்ளன.

இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றம் போன்ற விடயங்களை இந்த நீதிமன்றம் கையாளுகிறது. பயங்கரவாதத்தையும் இதில் இணைத்துக்கொள்ள முயற்சி காணப்பட்டது. ஆனால், இன்றுவரை அந்த விடயத்தில் வெற்றிபெற்றிருக்கவில்லை என்று சோங் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதம் தொடர்பான பிரச்சினை நீதிமன்றத்தை எட்டுவதற்கு நீங்கள் விரும்புகிறீர்களா? என்று கேட்கப்பட்டபோது, அவர் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்த விடயம் அரச தரப்புகளை சார்ந்த விடயம் என்றும் நீதிமன்றம் சம்பந்தப்பட்டதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்தப்படாமல் இலங்கை விடயம் குறித்து குற்றவியல் நீதிமன்றத்தால் செயற்பட முடியாதென்று அவர் தெரிவித்திருக்கிறார்.

உலகின் மூலைகளில் குறிப்பிட்ட கொடூரங்கள் நடக்கும்போது அவை குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்தலாமென சகலரும் நினைப்பதாகத் தோன்றுகிறது. நாங்கள் நீதிமன்றம் தொடர்பாக அதிகரித்துவரும் அங்கீகாரத்தையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளோம். மறுபுறத்தில் ரோம் சாசனத்தில் விசேடப்படுத்தப்பட்ட சட்ட விதிகளுக்கு அமைவாகவே நாங்கள் செயற்பட வேண்டியுள்ளது.

ஆதலால் இலங்கை, இஸ்ரேல், அமெரிக்கா போன்ற சாசனத்தில் கைச்சாத்திடாத நாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தால் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment