Monday, July 11, 2011

தமிழர்கள் 87 பேர் கப்பலில் இருந்து இறங்க மறுப்பு

தமிழர்கள் 87 பேர் கப்பலில் இருந்து இறங்க மறுப்புஇந்தோனேசிய கடற்படையினரால் பிடித்து தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள், தம்மை நியுசிலாந்து அரசோ, ஐநா மன்றமோ பொறுப்பேற்க வேண்டும் என்று கோரியுள்ளனர். 

 

இலங்கைத் தமிழர்கள் 87 பேரை நியூசிலாந்து நோக்கி ஏற்றிச் சென்று கொண்டிருந்த கப்பலொன்று இந்தோனேசிய துறைமுகத்தில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இயந்திரக் கோளாறு ஏற்பட்ட நிலையில் இந்தோனேசியக் கடற்பரப்பில் நின்று கொண்டிருந்த போதே எம்.வி.அலிசியா என்ற இந்தக் கப்பலை சனிக்கிழமை இந்தோனேசிய கடற்பரப்பு காவல் துறையினர் மற்றும் கடற்படையினர், டான் ஜுங் பினாங்
என்ற துறைமுகத்திற்கு கொண்டு சென்றுவிட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.

இந்த கப்பலில் இருந்தவர்களில் சிலரிடம் விசாரணை நடத்தப் பட்டுள்ள நிலையில், தங்களை ஐ.நா மன்றமோ அல்லது நியுசிலாந்து நாடோ பொறுப்பேற்றுக் கொள்ளும் வரை தாங்கள் கப்பலை விட்டு இறங்கப் போவதில்லை என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.

விடுதலைப் புலிகளின் உறவினர்கள், இறுதி யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் கப்பலில் இருப்பதாக கப்பலிலிருந்து செல்வக்குமார் என்பவர் தமிழோசைக்குத் தெரிவித்தார்.

கப்பலிலுள்ள பெரும்பாலானவர்கள் மலேஷியாவிலிருந்தே, புறப்பட்டதாகவும், கப்பல் இந்தோனேஷியாவிலிருந்து விலைக்கு வாங்கப்பட்டதென்றும் செல்வக்குமார் மேலும் கூறினார்.

போரின் பின்னர் இலங்கையில் இன்னும் சுமுக நிலை திரும்ப வில்லையென்றும் அங்கு தாம் எதிர்கொள்ளக்கூடிய ஆபத்து காரணமாகவே வெளிநாட்டுக்கு தஞ்சம் கோரிச் செல்வதாகவும் கப்பலிலுள்ளவர்கள் கூறுகின்றனர்.

0 comments:

Post a Comment