Monday, July 11, 2011

இணக்க அரசியல் பாதையில் இணைகிறதா அமெரிக்கா?-இதயச்சந்திரன்

இணக்க அரசியல் பாதையில் இணைகிறதா அமெரிக்கா?-இதயச்சந்திரன்

 
அண்மையில் அமெரிக்க காங்கிரஸின் ஆய்வுச் சேவை வெளியிட்ட எட்டு பக்க அறிக்கை, இலங்கை குறித்தான அமெரிக்காவின் பார்வை எவ்வாறு அமைய வேண்டுமென்பதை வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு உதவி வழங்குவதன் ஊடாக, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது மேலாண்மையை நிலைநாட்ட சீனா முயல்வதாக அவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
அதில் கூறப்பட்ட விடயங்கள் ஒன்றும் புதிதானவையல்ல. ஏற்கனவே பல ஆய்வாளர்களால முன்வைக்கப்பட்ட கருத்துகளின் ஒட்டுமொத்த வடிவம், எட்டுப் பக்க அறிக்கையாக வெளி வந்துள்ளது.
ஒருவகையில் இலங்கை விவகாரம் குறித்து, அண்மையில் சர்வதேச நெருக்கடிக் குழு (International Crisis Group) வெளியிட்ட அறிக்கையும் ,இதுவும், இந்தியாவிற்கே பலமான செய்தியொன்றினை கூற முனைவது போலுள்ளது.
2005 இலிருந்து சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுவது போன்று, “முத்துமாலைத் திட்டம்’ (String of Pearls) ஒன்றின் ஊடாக, துறைமுக அபிவிருத்தி என்கிற போர்வையில், கடற்படை விரிவாக்கத்திற்கான மூலோபாயத் திட்டமொன்றினை சீனா வகுப்பதாகவும் அவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
இராணுவ வெற்றியால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு பெரும்பான்மை மக்கள் மத்தியில் பெற்றுவரும் பேராதரவு குறித்து அறிக்கை கவலையடைகிறது.
வீட்டோ அதிகாரம் கொண்ட இரண்டு வல்லரசுகள், இலங்கைக்குச் சார்பான நிலைப்பாட்டுடன் இருப்பதால், மனித உரிமை அமைப்புகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத கையறு நிலை தோன்றியிருப்பதாகவும் அது கூறுகிறது.
அதாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் வகையில், ஒரு தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிறைவேற்ற முடியாமல், சீனாவும் ரஷ்யாவும் தடுக்கின்றன என்பதுதான் அமெரிக்காவின் ஆதங்கம்.
அதேவேளை, போர்க்குற்ற விசாரணை ஒன்றினை ஐ.நா. சபையோ அல்லது சர்வதேச சமூகமோ முன்னெடுத்தால், அது இலங்கை பேரினவாதத்தின் ஆதரவுடன் தற்போதைய ஆட்சியினைப் பலப்படுத்தி எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடுமென, பார்வையாளர்கள் கருதுவதாகக் கூறுகிறது.
ஆட்சியைப் பலப்படுத்தினால் வரும் எதிர்மறையான விளைவுகள் குறித்து இந்த அறிககை வெளிப்படையாக எதனையும் கூறாவிட்டாலும், சீனாவின் ஆதிக்கத்திற்குள் இலங்கை முற்று முழுதாக விழுந்து விடும் என்பதையே அது மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறது.
அமெரிக்காவிற்கு இருக்கும் தடுமாற்றமே இந்தியாவிற்கும் இருக்கிறது.
“ஒற்றையாட்சிக்குள், ஒருமித்த இலங்கை பலமாக இருக்க வேண்டும்’ என இந்திய வெளியுறவுச் செயலர் நிரூபமா ராவ் அண்மையில் கூறிய விடயத்தைக் கவனிக்க வேண்டும்.
அதாவது நிபுணர் குழு அறிக்கை மற்றும் போர்க் குற்றவிசாரணை ஊடாக, இலங்கை மீது மேற்குலகம் பிரயோகிக்கும் அழுத்தங்களைப் போன்று, தாமும் மோசமான அச்சுறுத்தலை விடுத்து, இலங்கையுடனான உறவில் விரிசலை உருவாக்க இந்தியா விரும்பவில்லை என்பதையே நிரூபமா ராவின் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன.
அரசோடு பேசுங்களென்று கூட்டமைப்பை வலியுறுத்தும் அதேவேளை, 13 ஆவது திருத்த சட்ட அமுலாக்கம் குறித்தோ அல்லது அரசியல் தீர்வு பற்றியோ நீங்கள் முடிவெடுங்களென்று இலங்கையிடம் கூறுகின்றார் நிரூபமாராவ்.
ஆகவே தமிழ் மக்களுக்காகவோ அல்லது மேற்குலகத்திற்காகவோ, இலங்கை அரசினைப் பகைத்துக் கொள்ள, தற்போதைய நிலையில் இந்தியா தயாராக இல்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
இதே நிலைப்பாட்டை அமெரிக்காவும் எடுக்க முயல்வது போன்றே, காங்கிரஸின் ஆய்வுச் சேவையின் அறிக்கை புலப்படுத்துகிறது.
சீனா மேற்கொள்ளும் முதலீட்டு ஆதிக்கப் போக்கினை தடுத்து நிறுத்த முடியாத நிலையில், இந்தியாவும் மேற்குலகும் இருப்பதைக் காணலாம்.
தொடர்ச்சியாக அரச பிணையங்களையும், முறிகளையும் விற்றுவரும் இலங்கையின் பொருளாதாரம், பலவீனமாக இருப்பதை, சீனா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதை உணரும் மேற்குலகம், போர்க்குற்ற விசாரணை என்கிற ஆயுதத்தை கொண்டு இலங்கையை அச்சுறுத்தினாலும் அது எதிர்மறையான விளைவுகளையே உருவாக்குமென நம்புகிறது.
அதேவேளை இந்தியாவின் நழுவல் போக்கும், உறவுக்காக ஏங்கும் நிலைப்பாடும் மேற்குலகைப் பொறுத்தவரை பல நெருக்கடிகளை தோற்றுவிக்கிறது.
இலங்கை இராணுவத்தின் உயர்நிலை அதிகாரிகள் உடனான உறவுகளை வலுப்படுத்த, இந்தியா மேற்கொள்ளும் அண்மைக் கால நகர்வுகளும், பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றினை ஏற்படுத்த முனையும் இந்தியாவின் எதிர்பார்ப்பும், மேற்குலகின் இந்து சமுத்திர பிராந்தியம் குறித்த அல்லது குறிப்பாக இலங்கை பற்றியதான தந்திரோபாய கொள்கையில் மாறுதல்களை ஏற்படுத்தலாம் போல் தெரிகிறது.
ஆகவே தமிழர் தாயகம் மீதான பொருண்மிய ஆதிக்கம், “சீபா’ ஒப்பந்தம் போன்றவை கை நழுவிச் சென்ற நிலையில், அரச இயந்திரத்தின் வலுவான மையமான படைத்துறை உயர்மட்டத்தோடு, இறுக்கமான உறவினை உருவாக்கிக் கொள்ளும் புதிய முயற்சியொன்றில் இந்தியா ஈடுபடுவதை தற்போது காணலாம்.
எட்டு சுற்றப் பேச்சுவார்த்தைகள், 13 ஆவது திருத்தச் சட்ட அமுலாக்கம், இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மீள் குடியேற்றம், இயல்பு வாழ்வு என்பவை குறித்து அக்கறைப்படுவது போன்று இந்தியா வெளிக்காட்டினாலும், அவர்களின் உள்நோக்கமும் நலனும், இவை சார்ந்து இருக்கவில்லை என்பது தான் உண்மை.
மேற்குலகும் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இந்தியாவிற்குமிடையே நிலவும் சந்தை சார்ந்த ஆதிக்கப் போட்டியினை எவ்வாறு கையாள்வது என்பதிலும், அதேவேளை அமெரிக்காவின் பொருண்மிய பிடிமானம் ஆசியாவில் தளர்ந்து செல்கிறது என்பதனை உணர்ந்து கொள்வதிலும், இலங்கையின் வெளியுறவு இராஜதந்திரிகள் சரியான மதிப்பீட்டினை கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.
அமெரிக்காவின் உள்ளக் கிடக்கையை, ஆதங்கத்தை, காங்கிரஸின் அறிக்கை அம்பலமாக்கி, இலங்கை அரசின் இறுக்கமான நிலைப்பாட்டினை மேலும் வலுப்படுத்தி உள்ளதென்று கணிப்பிடலாம்.
தமது பலவீனமான பக்கங்களை பகிரங்கமாக வெளிப்படுத்தும் அமெரிக்காவின் இது போன்ற அறிக்கைகளை இந்தியா இன்னமும் வெளியிடவில்லை என்பதிலிருந்து, இந்தியாவின் நுண்ணரசியல் தளத்தினை புரிந்து கொள்ளலாம்.
ஆனால் கொதி நிலையை எட்டியுள்ள சீனாவின் பொருண்மிய வளர்ச்சியானது, அடுத்த பாய்ச்சலிற்கான உலக சந்தைத் தளம் பலவீனமுற்று இருப்பதால், ஏனைய வல்லரசுகளோடு முரண் நிலையை உருவாக்கும் வகையில், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தமக்குச் சார்பான அணிகளை உருவாக்க சீனா தற்போது விரும்பாது.
இதுவே இந்தியா, அமெரிக்காவிற்கான பலமான பக்கங்களõக அல்லது தளமாக அமையலாம்

0 comments:

Post a Comment