தமிழ் திரையுலகின் புதிய முயற்சியாக 16 இயக்குனர்கள் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கின்றனர்.
தமிழ் திரையுலகில் இயக்குனர்கள் நடிப்பது புதிதன்று. ஆனால் தற்போது ஞானி என்ற படத்தில் 16 இயக்குனர்கள் சேர்ந்து நடிக்கின்றனர்.
16 இயக்குனர்கள் சரி, ஹீரோ யார் என்று தானே கேட்கிறீர்கள். அது வேறு யாருமன்று நம்ம மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நடித்த இயக்குனர் தருண் கோபி தான். ஹீரோயின் நடிகை ஸ்வேதா.
இயக்குனர்கள் எஸ்.எஸ்.ஸ்டன்லி, பிரபுசாலமன், தம்பி ராமய்யா, சரவண சுப்பையா, சிங்கம்புலி, ரவிமரியா, அரவிந்த்ராஜ், சித்ராலட்சுமணன், சசிமோகன், கேயார், செல்வபாரதி, பிரவின்காந்தி, சஞ்சய்ராம், ஆர்த்திகுமார் உள்ளிட்ட 15 பேர் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு இன்னொரு சிறப்பு அம்சமும் உண்டு. அது என்னவென்றால் இதற்கு பிரசாந்த், ராகவேந்திரா, ராபர்ட், இப்ராகிம், அய்யர் ஆகிய 5 புதுமுகங்கள் இசையமைக்கின்றனர். இதை ஒளிப்பதிவு செய்கிறார் மதியழகன்.
படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று பெரிய பொறுப்பை ஏற்றிருக்கிறார் ஆர்த்தி குமார். சுபாசினி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜே.எஸ்.குமார், எல்.சுரேஷ்குமார் ஆகியோர் படத்தை தயாரிக்கின்றனர்.
ஒரு பெரிய பட்டாளமே இருக்கின்றதே அப்படி என்ன கதை என்று நினைக்கிறீர்களா. வேறு என்ன கிராமம் தான். அண்ணனைக் கொன்றவர்களை தம்பி பழிக்கு பழி வாங்குகிறான்.
அண்ணன் முத்து, தம்பி முருகன். இருவரும் ஒரு மரக்கடைக்காரரிடம் வேலை செய்கின்றனர். ஒரு வழக்கில் எங்கே முத்து தங்களைக் காட்டிக் கொடுத்துவிடுவானோ என்று நினைத்து அவனை கடைக்காரரின் மைத்துனர்களும், தம்பியும் சேர்த்து தீர்த்துக் கட்டுகின்றனர். அவர்களை பழிக்குப் பழி வாங்குகிறான் முருகன். ஆனால் விதி அவனையும் பழிவாங்குகிறது.Topics: tamil cinema, director, kollywood, gnani, கோலிவுட், ஞானி, இயக்குனர்கள்
0 comments:
Post a Comment