Tuesday, July 12, 2011

சுதந்திர தேர்தலை நடத்த வக்கில்லாத அரசு அரசியல் தீர்வை எப்படித் தரும்? - மனோ

வடக்கிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு குறிவைத்து தாக்கப்படுகின்றது. கூட்டமைப்பின் வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் அச்சுறுத்தப்படுகிறார்கள். தமிழ் வாக்காளர்கள் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அனைத்து அரச வளங்களும் கூட்டமைப்பிற்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு ஆதரவாகும் பயன்படுக்கப்படுகின்றன.

இத்தகைய தராதரங்களை கொண்டுள்ள இன்றைய அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வை வழங்குவதற்கு உடன்படுமா? யுத்தம் முடிந்துவிட்டது, இனப்பிரச்சினை தீர்விற்கு தடையாக இருந்த புலிகள் அழிந்துவிட்டார்கள்.

ஆகவே இனப்பிரச்சினைக்கு தீர்வை இந்த அரசாங்கம் வழங்கப்போகின்றது என தமிழ் மக்களுக்கு அறிவுரை வழங்கிவந்த இந்தியாவும், அமெரிக்காவும் தான் இதற்கு பதில் கூறவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் எதிர்வரும் 23ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

வட மாகாணத்தில் நடைபெறும் உள்ளூராட்சி தேர்தல்களில் எப்பாடுபட்டாவது, வெற்றி பெற வேண்டும் என அரசாங்கம் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுகின்றது. ஜனநாயக வழிமுறைகளையும், தேர்தல் சட்டங்களையும் மீறாத வரைக்கும் அரசாங்கத்தின் இந்த எண்ணம் நியாயமானதாகும். ஆனால் வடக்கிலே இன்றைய தேர்தல் நடைமுறை ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துவிட்டுள்ளது.

இன்றைய அரசாங்கத்தின் ஆட்சியிலே தென்னிலங்கையில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலுமே தேர்தல் விதி முறைகள் அப்பட்டமாக மீறப்பட்டதையும், வன்முறை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதையும் நாங்கள் அறிவோம். இத்தகைய செயற்பாடுகளில் அரசாங்க கட்சியும், எதிர்க்கட்சிகளும் சட்டங்களை மீறியிருந்தன.

ஆனால் வடக்கிலே இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் குறிவைத்து தாக்கப்படுவதை நாம் அவதானிக்க முடிகின்றது. கூட்டமைப்பின் தலைவர்களும், வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் மிகவும் பயங்கரமான சூழ்நிலைக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

வடக்கிலே வாழ்கின்ற தமிழ் வாக்காளர்கள் பாரிய அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். இராணுவம் அரசாங்க கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகின்றது. இராணுவ ஆட்சியின் கொடுரமான கரங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை நோக்கி நீண்டுள்ளன.

இந்நிலையில் நடைபெறவிருக்கும் தேர்தல் நீதியானதும், சுதந்திரமானதும் ஆக நடைபெறுமா என்ற கேள்வி பெருத்தளவில் எழுந்துள்ளது. பயங்கரவாதத்தை அழித்து போரை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டோம் என்று பிரகடனப்படுத்தியுள்ள இன்றைய அரசாங்கத்தின் இலட்சனம் இதுதான் என்பது அம்பலத்திற்கு வந்துள்ளது.

யுத்தம் முடிந்துவிட்டது, இனப்பிரச்சினை தீர்விற்கு தடையாக இருந்த புலிகள் அழிந்துவிட்டார்கள். ஆகவே இனப்பிரச்சினைக்கு தீர்வை இந்த அரசாங்கம் வழங்கப்போகின்றது என தமிழ் மக்களுக்கு அறிவுரை வழங்கிவந்த இந்தியாவும், அமெரிக்காவும் தான் இதற்கு பதில் கூறவேண்டும். என்று மனோ கணேசன் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment