Tuesday, July 12, 2011

டீஸல் விலை உயர்வைக் கண்டித்து டி ராஜேந்தர் ஆர்ப்பாட்டம்

சென்னை: பெட்ரோல், டீசல், சமையல்எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து டி ராஜேந்தரின் லட்சிய தி.மு.க. சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை எதிரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென் சென்னை மாவட்ட லட்சிய தி.மு.க. செயலாளர் எம்.எம்.சீடுர். மதன் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தார்.

லட்சிய தி.மு.க. தலைவர் டி. ராஜேந்தர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு விலை உயர்வுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார். லட்சிய தி.மு.க.வை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் டி. ராஜேந்தர் பேசுகையில், "மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை உயர்த்தி வருவதால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு மத்திய அரசுதான் பெட்ரோல் ஏற்றுமதி செய்கிறது. ஆனால் இலங்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 ரூபாய். ஆனால் இங்கு லிட்டருக்கு 67 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.

பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 45 ரூபாய், பணக்கார நாடான அமெரிக்காவில் 50 ரூபாய், நமது நாட்டில்தான் அநியாயத்துக்கு விலை ஏற்றி உள்ளனர். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை ரத்து செய்யவேண்டும்.

இலங்கைக்கு பெட்ரோல் ஏற்றுமதி செய்வதை நிறுத்த வேண்டும். இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசு தீர்மானத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்," என்றார் அவர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் ஏ. முரளி, எஸ். துரை, மேகநாதன், டி. வாசு, பி. கருணாநிதி, வி.என். கருணா, மகளிர் அணி செயலாளர் வசந்தி பாண்டியன், வட சென்னை மாவட்ட செயலாளர் கே.ஜே. சுரேஷ் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.Topics: t rajendar, diesel, protest, டி ராஜேந்தர், டீசல், விலை உயர்வு, கண்டனம்

0 comments:

Post a Comment