வவுனியா சிறைச்சாலையில் தங்களை விடுவிக்ககோரி மேற்கொண்டுவரும் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவாக மேலும் 40 சிறைக்கைதிகள் போராட்டத்தில் இன்று சனிக்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக தங்கள் மீதான விசாரணைகளை உடனடியாக மேற்கொண்டு தங்களது விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கையெடுக்குமாறு கோரி அரசியல் கைதிகள் தொடராக உண்ணாவிரத போராத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த அரசியல் கைதிகளின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில் அவர்களுக்கு ஆதரவாக மேலும் 40பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கும் கைதிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
காலத்துக்கு காலம் தமிழ் அரசியல் கைதிகள் போராட்டம் மேற்கொண்டுவருகின்றபோதிலும் அரசாங்கம் அது தொடர்பில் கவனத்தில் கொள்வதில்லை.
தேர்தல் காலம் நெருங்கியுள்ள இந்த வேளையில் வடக்குக்கு படையெடுக்கும் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் இந்த அரசியல் கைதிகள் தொடர்பில் அக்கரைகொள்ளாதது அவர்களது சுயநலத்தை வெளிக்காட்டி நிற்கின்றது.
தமிழ் அரசியல்கைதிகள் தொடர்பில் பல்வேறு தடவைகள் ஜனாதிபதி, சட்டமா அதிபர், நீதியமைச்சர், பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் கவனத்துக்கு கொண்டுவந்தபோதிலும் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகவே உள்ளது.
இந்த நிலை தமிழ் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே உள்ளது. இன்று சிறைச்சாலையில் பலர் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கையில் உருவாகக் காரணமாகவிருந்தவர்கள் இன்று சுதந்திரமாக அரசாங்கத்தின் ஆதரவுடன் உல்லாசம் அனுபவித்துவரும் வேளையில் அப்பாவி தமிழ் இளைஞர்கள் சிறையில் வாடுவது வேதனையளிப்பதாகவுள்ளது.
எனவே ஜனாதிபதி, நீதியமைச்சர், சட்டமா அதிபர் இனியாவது இந்த அரசியல் கைதிகளின் நிலையினை கருத்தில் கொண்டு துரித நடவடிக்கையெடுக்க வேண்டும்.
இல்லாது போனால் இன்று வவுனியாவில் ஆரம்பித்துள்ள போராட்டம் நாளை இலங்கை முழுவதும் பரவலாம். இவற்றை தடுக்க காத்திரமான நடவடிக்கையினை ஜனாதிபதி எடுக்கவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment