Saturday, July 16, 2011

இன விகிதாசார அடிப்படையில் ஆட்சேர்ப்பு - பொன்.செல்வராசா எதிர்ப்பு

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு இன விகிதாசார அடிப்படையில் ஆட்களை திரட்டுவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார் என பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த சேவைக்கு ஆட்களைத் திரட்டுவது தொடர்பாக மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் போட்டிப் பரீட்சையொன்றை நடத்துவதற்கான அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், கூடுதலான புள்ளிகளைப் பெற்றவர்கள், அரச நிர்வாக சுற்றறிக்கை (15/90)ன்படி இன விகிதாசார அடிப்படையிலேயே இந்த சேவைக்கு தெரிவு செய்யப்படுவார்கள் என மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரினால் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த அரச நிர்வாக சுற்றறிக்கை ஏற்கனவே நீதிமன்ற உத்தரவின் பேரில் பல வருடங்களுக்கு முன்னர் இரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா, அதன் பின்னர் தான் அறிந்தவரை இன விகிதாசார அடிப்படையில் நியமனங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் கூறுகிறார்.

சில வாரங்களுக்கு முன்பு மத்திய அரசினால் இலங்கை நிர்வாக சேவைக்கு ஆட்திரட்டல் நடைபெற்ற போதும் திறமை அடிப்படையிலேயே சுமார் 250 பேர் தெரிவானார்கள். இதில் தமிழ் பேசும் எவரும் தெரிவாகவில்லை. இன விகிதாசார அடிப்படை பேணப்பட்டிருந்தால் 40 - 50 பேர்வரை அதில் தமிழ் பேசும் இனத்தவர்கள் தெரிவாக வாய்ப்பு கிடைத்திருந்திருக்கும் என்றும் சுட்டிக் காட்டினார் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா.

மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளருக்கு தான் அனுப்பி வைத்துள்ள ஆட்சேபனைக் கடிதத்தில் திறமை அடிப்படையில் ஆட்தெரிவு இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

தனது கடிதத்திற்கு பதில் கிடைக்காவிட்டால் அல்லது சாதகமான முடிவு கிடைக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

இது தொடர்பாக மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு அதிகாரிகளின் கருத்துக்களை உடனடியாகப் பெற முடியவில்லை.

0 comments:

Post a Comment