Wednesday, July 13, 2011

விடுதலைப் புலிகளை இந்தியா ஆதரிக்கும் நிலைமை வரும்.

விடுதலைப் புலிகளை இந்தியா ஆதரிக்கும் நிலைமை வரும்.

இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவோடு எப்போது கடுமையான முரண்பாடு ஏற்படுகின்றதோ அப்போது விடுதலைப் புலிகளை இந்தியாவே ஆதரிக்கும் நிலை வரும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடு கடந்த தமிழீழ அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக  விடுதலை சிறுத்தைகள் கட்சியால் கையெழுத்து இயக்கம் சென்னையில் நேற்று ஆரம்பிக்கப் பட்டது. கட்சித் தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்டு இதனை ஆம்பித்து வைத்தார்.

இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்:

மத்திய அரசை சர்வதேச சமூகம் மட்டும்தான் பணிய வைக்க முடியும். இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையே ஈழம் மலரக் கூடாது என்பது தான். என்றைக்கு ராஜபக்ஷவோடு இந்தியாவுக்கு கடுமையான முரண்பாடு ஏற்படுகிறதோ, அன்றைக்கு இந்தியாவே விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் நிலை வரும். புலிகளை ஆதரித்து ஈழம் வாங்கித் தருகிறோம் என்ற நிலைப்பாட்டை எடுப்பார்கள்.

இந்திராகாந்தி அம்மையார் அன்றைக்கு ஜெயவர்த்தன அரசை மிரட்டுவதற்காக போராளிகளை இந்தியாவுக்கு அழைத்து வந்து பயிற்சி கொடுத்தார். போராளிகள் யாரும் அதைக் கேட்க வில்லை. அன்றைக்கு அவர்களுக்கு பயிற்சி கொடுத்ததும் இந்திய அரசுதான். ஆயுதங்கள் கொடுத்ததும் இந்திய அரசுதான்.

ஐந்து குழுக்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களுக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து, ஜெயவர்த்தனவுக்கு எதிராக கலவரங்களை ஏற்படுத்துங்கள் என்று கூறியது இந்திய அரசு தான். ஜெயவர்த்தன பணிந்த பின்னர், ஆயுதங்களைக் கீழே போடுமாறு போராளிகளிடம் சொன்னார்கள். அப்போது பிரபாகரன் மட்டும் அதனை மறுத்தார். உங்களுக்காக ஒன்றும் நாம் ஆயுதம் ஏந்தவில்லை. எங்களுக்காகத் தான் ஆயுதம் ஏந்தினோம் என்று அன்று கூறினார்.  இது தான் அவர்களுக்கிடையே இருக்கும் முரண்பாடாகும் என்றார் அவர்.

0 comments:

Post a Comment