சென்னை: சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் புதன்கிழமை இரவு 10.45 மணிக்கு சென்னை திரும்பினார்.
சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த அவர், ஜூன் 14-ம் தேதி டிஸ்சார்ஜ் ஆனார்.
எனினும் தொடர் மருத்துவ பரிசோதனைகள் தேவைப்பட்டதால், அவர் அங்கேயே தங்கி ஓய்வெடுத்தார்.
அவர், புதன்கிழமை இரவு சென்னை வருவதாக தகவல் வெளியானது. இதனால், புதன்கிழமை மதியம் முதலே விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
தமிழகம் முழுவதுமிருந்து ரஜினி ரசிகர்கள் விமான நிலையத்துக்கு வந்தவண்ணம் இருந்தனர்.
இரவு 9.30 மணி வரை ரஜினிகாந்த் விமான நிலையத்தில் எந்த வழியாக ரஜினிகாந்த் வருகிறார் என்பது விமான நிலைய போலீஸாரால் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
ரஜினியின் வருகையை எதிர்பார்த்து அவருடைய ரசிகர்கள் அனைவரும் விமான நிலைய பிரதான நுழைவு வாயிலில் மேள தாளம், ஆட்டம் பாட்டம் என அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தனர்.
இரவு 9.40 மணியளவில் விமானநிலைய 6-வது வாயில் (விஐபி பிரிவு) வழியாக அவர் வருகிறார் என்று தகவல் வெளியானது.
இதையடுத்து ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் 6-வது வாயிலில் கூடினார்கள். இரவு 10 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ரஜினிகாந்த் வந்திறங்கினார்.
வாயிலின் முகப்பில் நின்றிருந்த தனது காருக்கு வந்த ரஜினிகாந்த், ரசிகர்களைப் பார்த்ததும் தனது பாணியில் கைகளை தலைக்கு மேல் உயர்த்தி 3 முறை வணக்கம் தெரிவித்து கையசைத்தார்.
வெள்ளைத் தாடியுடன் காணப்பட்ட ரஜினிகாந்த் நீல நிற ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை நிற சட்டை, கருப்புக் கண்ணாடி அணிந்திருந்தார்.
அவருடன் மனைவி லதா ரஜினிகாந்த், மகள் சௌந்தர்யா, குடும்பத்தினர் மற்றும் டாக்டர்களும் வந்திருந்தனர்.Topics: rajini, chennai return, ரசிகர்கள் உற்சாகம், rajini fans, ரஜினி
0 comments:
Post a Comment