திரிபோலி நகரை குண்டு வைத்து தகர்க்க கடாபி திட்டம்: ரஷிய தூதர் தகவல்
லிபியாவில், அதிபர் கடாபிக்கு எதிராக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புரட்சியாளர்கள் லிபியாவின் 2-வது பெரிய நகரமான பெங்காசி மற்றும் அதை சுற்றியுள்ள பலநகரங்களை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளனர். தற்போது தலைநகர் திரிபோலியையும் நெருங்கி விட்டனர். இவர்களுக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் உதவியாக உள்ளன.
இந்த நகரம் எந்த நேரமும் புரட்சியாளர்கள் வசம் ஆகலாம் என்ற நிலை உள்ளது. ஆனால், திரிபோலியை புரட்சியாளர்கள் கைப்பற்றி விட்டால் அந்த நகரை பூண்டோடு அழிக்க அதிபர் கடாபி திட்டமிட்டுள்ளதாக ரஷியாவின் சிறப்பு தூதர் மிகைல் மார்கெலோவ் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் சமாதானம் குறித்து பேச கடந்த மாதம் (ஜூன்) 16-ந்தேதி அவர் லிபியா சென்று இருந்தார். அப்போது அந்த நாட்டின் பிரதமர் பாக்தாதி அல்- மக்முதியை சந்தித்து பேசினார். அப்போது இந்த தகவல் தனக்கு கிடைத்ததாக அவர் கூறியுள்ளார்.
இதை ரஷியாவில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் அவர் கூறும் போது, லிபியா அதிபர் கடாபியிடம் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் உள்ளன. அவற்றை அவர் இன்னும் பயன்படுத்தவில்லை. தலைநகர் திரிபோலியை புரட்சியாளர்கள் கைப்பற்றினால் ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகள் மூலம் தற்கொலை தாக்குதல் நடத்தி அந்த நகரத்தை அழிக்க அவர் திட்டமிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment