சென்னை: சிறுநீரக பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று, பூரண குணமடைந்து சென்னைக்குத் திரும்பிய நடிகர் ரஜினிகாந்தை, விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டதாக அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.
சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக சென்றிருந்த ரஜினிகாந்த் புதன்கிழமை இரவு ஊர் திரும்பினார்.அவரை வரவேற்க பெருமளவில் ரசிகர்கள் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.
ரஜினிகாந்த் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் புதன்கிழமை இரவு சென்னை திரும்பும் தகவல் கிடைத்ததால் அவரது ரசிகர்கள் புதன்கிழமை மதியம் முதலே மீனம்பாக்கம் விமான நிலையத்தில் குவியத் தொடங்கினார்கள்.
பாதுகாப்பு கருதியும், ரசிகர்களிடம் ரஜினி சிக்கி விடக் கூடாதே என்பதற்காகவும், ரஜினி எந்த வாயில் வழியாக வருவார் என்பதை இரவு 9.30 மணிவரை போலீஸார் ரகசியமாக வைத்திருந்தனர். இருப்பினும் ரஜினி வரும் பாதையைத் தெரிந்து கொண்ட ரசிகர்கள் அங்கு ஓடி காரை முற்றுகையிட்டனர். அவரை பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைக்க தடியடி வரை போக வேண்டியதாயிற்று போலீஸாருக்கு.
முன்னதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்திறங்கிய ரஜினிகாந்தும் மற்றவர்களும் வழக்கம்போல விமானப் பாலம் மூலம் வெளியே வந்தனர்.
வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் இமிக்ரேஷன் என்று அழைக்கப்படும் அனுமதி சோதனைக்குப் பிறகுதான் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். முக்கியமான பிரமுகர்கள் இதுபோல வெளிநாட்டுப் பயணம் முடித்து இந்தியா திரும்புவதாக இருந்தால், அவர்களை விமானத்திலிருந்து இறங்கும் இடத்திலேயே வரவேற்று, இமிக்ரேஷன் அனுமதி அளிப்பது உண்டு.
இருப்பினும், ரஜினிகாந்த், 'இமிக்ரேஷன்' சோதனைக்கு நடத்தியே அழைத்துச் செல்லப்பட்டார். அவர் மூச்சிரைக்க நடந்து வந்ததைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது' என்று கண்கள் கலங்க தெரிவித்துள்ளார் பணியில் இருந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர்.
இதுபோன்ற நேரங்களில் பிரமுகர்களை ஏற்றிச் செல்ல டாடா சுமோ போன்ற வாகனங்கள்தான் பயன்படுத்தப்படும். ஆனால், ரஜினிகாந்த் ஒரு பழைய பஸ்ஸில் அழைத்துச் சென்று ஆறாவது வாயிலில் இறக்கிவிடப்பட்டார். ரஜினிகாந்த் ஒரு நோயாளியாக சிகிச்சை முடிந்து நாடு திரும்புகிறார் என்று தெரிந்தும் விமான நிலைய அதிகாரிகள் முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டாமா?'' என்று ஆதங்கம் எழுப்பியுள்ளனர் ரசிகர்கள்.
ரஜினி குடும்பத்தினர் மீதும் தவறு உள்ளது...
இத்தனை குளறுபடிகளுக்கும் ரஜினி குடும்பத்தினரும் ஒரு காரணம் என்கிறார் ரஜினி ரசிகர் ஒருவர்.
"1996-ல் ரஜினி வெளிநாட்டிலிருந்து திரும்பும்போது ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணா முன்னேற்பாடுகளைக் கவனமாகச் செய்திருந்தார். அதேபோல, ரஜினி குடும்பத்தினர் முதல்வரின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டிருந்தால், நிச்சயமாக அவர் தகுந்த ஏற்பாடுகளுக்கு உத்தரவிட்டிருப்பார். அவர்கள் சொல்லாதது தான் தவறு'' என்று கருத்துத் தெரிவித்தார் அவர்.Topics: rajini, chennai airport, insult, ரஜினி, விமான நிலையம், அவமதிப்பு
0 comments:
Post a Comment